தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2025ல் ஆறு படங்களில் திரிஷா

3 mins read
0ac15fed-917c-4ff5-8ca2-94ac5afac9ab
திரிஷா கமல்ஹாசன், சூர்யா, விஜய், அஜித் ஆகியோருடன் நடித்திருக்கும் படங்கள் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளன. - படம்: ஊடகம்

நடிகை திரிஷா 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இயக்குநர்கள், முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்த ஆண்டு மட்டுமே ஆறு படங்கள் வெளியாக உள்ளன.

அஜித், சிம்பு, கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டோருடன் இணைந்து நடிக்கும் இவருடைய ஆறு படங்களும் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய படங்களாக அமைந்துள்ளன.

இவர் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து வருகிறார். கேரளாவிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் வெளியாகி சிறப்பாக அமைந்து வருகின்றன.

விஜய்-திரிஷா கூட்டணியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘கோட்’ படம் நல்ல வசூலைத் தந்தது. இதில் நாயகிகளாக சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்த போதிலும் திரிஷா-விஜய் ஜோடி நடித்திருந்த ‘மட்ட’ பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கடந்த ஆண்டிலும் நடிகர் விஜய்யுடன் ‘லியோ’ படத்தில் நடித்திருந்தார் திரிஷா. இவர்களின் ஜோடிப் பொருத்தம் படத்தில் சிறப்பாக இருந்ததாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் அடுத்ததாக அஜித்துடன் திரிஷா இணைந்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வரும் ஜனவரி மாதத்தில் வெளியாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதைப்போல் அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் திரிஷா நடித்து இருக்கிறார்.

மேலும் கமல்ஹாசன் - சிம்பு கூட்டணியில் மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார். அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக இந்தப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூர்யா -ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகி வரும் ‘சூர்யா 45’ படத்தில் இணைந்துள்ள திரிஷா அண்மையில் கோவையில் உள்ள மருதமலை முருகன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த காட்சிகள் வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

கோவையில்தான் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மாசாணியம்மன் கோயிலில் படத்துக்கான பூஜை போடப்பட்டு சூர்யா, ஆர் ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் படத்தை ஆரம்பித்தனர். ஆன்மீகம் கலந்த திரைக்கதையுடன் இப்படம் உருவாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் திருமணத்தை முடித்துவிட்டு நடிகை திரிஷா தற்போது ‘சூர்யா 45’ படத்தில் பங்கேற்றிருக்கிறார்.

சூர்யாவின் ‘மௌனம் பேசியதே’ படத்தில் நாயகியாக அறிமுகமாகி தற்பொழுது சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதனை நேற்று முன்தினம் படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார் திரிஷா.

அப்போது திரிஷாவுக்கு பூங்கொத்து கொடுத்து சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி வாழ்த்தியுள்ளனர். அந்தப் புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்று குறிப்பிட்டுள்ளார் திரிஷா.

அடுத்த ஆண்டு குறைந்த இடைவெளியில் வெளியாக உள்ள இவரது ஆறு படங்களால் திரிஷா மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ஐந்து ஆண்டுகள்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் பல நடிகைகள் திரைத்துறையை விட்டு வெளியேறும் நிலையில், 22 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திரிஷா வலம் வருவது ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவால்தான் எனக் கூறுகின்றது கோலிவுட்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை