தான் நடித்த ‘கோட்’ படத்தின் தயாரிப்பாளருடன் வெளிநாட்டிற்குச் சுற்றுலா சென்றிருக்கிறார் திரிஷா.
இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், திரிஷாவிற்குக் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாம்.
படங்களில் அடுத்தடுத்து மும்முரமாக நடித்துவந்த போதிலும் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து சுற்றுக்களில் பங்கேற்பதிலும் அவர் தவறுவது இல்லை.
இந்நிலையில், சிறு ஓய்வு எடுத்துக்கொண்டு தன் தோழிகளுடன் சேர்ந்து வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறார். அந்த தோழிகளில் ‘கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் ஒருவர்.
மலைப் பாங்கான பகுதிகளில் சுற்றுலாக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. அவ்வாறு மலைப்பிரதேசத்தில் தான் மேற்கொண்ட சுற்றுலாப் பயணத்தின் புகைப்படங்களைத் தற்போது தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திரிஷா.
மேலும் தன்னைத்தானே நேசித்தால் மட்டுமே இத்தகைய இடங்களுக்குச் செல்லமுடியும் என்றும் அவர் தன்னுடைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
தங்களின் பயணக் காணொளியை அர்ச்சனா கல்பாத்தி இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். அதையே இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கிறார் திரிஷா. மேலும் 6 பேர் 16 பெட்டிகளுடன் சென்றிருப்பதாக பெட்டிகளின் காணொளியையும் வெளியிட்டுள்ளார்.
அட இது என்ன ஆறு பேருக்குப் 16 பெட்டிகளா? அப்படி என்னம்மா எடுத்துக்கொண்டு போயிருக்கிறீர்கள் என ரசிகர்கள் இன்ஸ்டகிராமில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
24 மணி நேரம் தூங்காமல் பயணம் செய்ததாக காணொளி வெளியிட்டிருக்கிறார் திரிஷா. தூங்காதவர்கள் போன்று முகத்தில் சோர்வு தெரியவில்லை. தோழிகள் உடனிருக்கும் மகிழ்ச்சியில் திரிஷா முகம் படங்களில் மின்னிக்கொண்டு இருக்கிறது.
திரிஷாவை எப்பொழுதும் இதுபோன்று மகிழ்ச்சியாகப் பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்கும்போது அவர் தோழிகளுடன் உல்லாசமாகச் சென்றிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
திரிஷா தற்போது அடிக்கடி தன் தோழிகளுடன் அதிக நேரம் செலவிடுகிறார். அப்படி தோழிகளுடன் இருக்கும்போது அதைப் புகைப்படம் அல்லது காணொயாக எடுத்து இன்ஸ்டகிராமில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நீங்கள் இருக்கும் இடத்தில் பயங்கரமாக வெயில் அடிக்கிறதே திரிஷா? அப்படி எங்கே போயிருக்கிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அவர் சென்ற இடத்தைக் குறிப்பிடவில்லை.
நீங்களும், அர்ச்சனா அக்காவும் தோழிகள் என்பது தெரியாமல் போச்சே. உங்களுக்கு இத்தனை நல்ல தோழிகள் இருப்பது மகிழ்ச்சி. எப்பொழுதும் சிரித்த முகமாகவே இருக்கவும் என்று பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
திரைத்துறையைப் பொறுத்தவரை உச்சத்தில் இருக்கிறார் திரிஷா. தனக்குப் பிடித்த நடிகரான அஜித்துடன் சேர்ந்து ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் ‘தக்லைஃப்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.
திரிஷாவின் திரைவாழ்க்கை மீண்டும் உச்சத்தைத் தொட காரணமாக இருந்தது மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படம்தான். இந்நிலையில், மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்திருக்கிறார் திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.