‘திரிஷ்யம் 3’ படம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் நடிகர் மோகன்லால்.
‘திரிஷ்யம் 3’ படம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் ‘திரிஷ்யம் 3’ படத்தினை உறுதி செய்திருக்கிறார்.
ஜீத்து ஜோசப் - மோகன்லால் கூட்டணி இணைந்து உருவாக்கிய படம் ‘திரிஷ்யம்’. அதனைத் தொடர்ந்து ‘திரிஷ்யம் 2’ உருவாகி அதுவும் வரவேற்பைப் பெற்றது.
அக்கதையின் இறுதி பாகமாக ‘திரிஷ்யம் 3’ இருக்கும் என சில மாதங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப் பேசியிருந்தார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘திரிஷ்யம்’. ஒரு சாதாரண மனிதன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்பாராத திருப்பங்களே ‘திரிஷ்யம்’ படத்தின் கதை.
மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் மறுபதிப்பு செய்யப்பட்டது. சீன மொழியில் மறுபதிப்பு செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.