‘பராசக்தி’ வெளியீட்டில் சிக்கல்: கதைத் திருட்டு புகாரால் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2 mins read
80034095-b582-4c68-bfd5-904f714f8fa8
‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன். - படம்: புதிய தலைமுறை

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’. 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உதவி இயக்குனரான ராஜேந்திரன், “கடந்த 1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு மொழிப்போரை மையமாக வைத்து ‘செம்மொழி’ என்ற தலைப்பில் நான் ஒரு கதையை எழுதியிருந்தேன். இந்தக் கதையை 2010ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.

“வாய்ப்புத் தேடும் முயற்சியில் இந்தக் கதையை பல தயாரிப்பாளர்களிடம் கூறியிருந்தேன். சேலம் தனசேகரன் என்பவர் மூலமாக நடிகர் சூர்யாவிடமும் இக்கதை சென்றடைந்தது. அவர்தான் இயக்குநர் சுதா கொங்கராவிடம் இந்தக் கதையைக் கொடுத்துள்ளார்.

“தொடக்கத்தில் ‘புறநானூறு’ என்ற பெயரில் சூர்யா நடிப்பதாகக் கூறப்பட்ட இந்தக் கதை, தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பராசக்தி’ என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.

“எனவே, என்னுடைய ‘செம்மொழி’ கதையைத் திருடி எடுக்கப்பட்டுள்ள இந்த ‘பராசக்தி’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்,” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கதைத் திருட்டு புகார் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

விசாரணை அறிக்கையை வரும் ஜனவரி 2ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி கெடு விதித்துள்ளார். எனவே, ஜனவரி 2ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் முடிவிலேயே, இது உண்மையிலேயே திருடப்பட்ட கதையா அல்லது உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கா என்பது தெரியவரும்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்