மகள்கள் சரண்யா ஸ்ரீநிவாஸ், சுனந்தா ஸ்ரீநிவாஸ் இருவரின் காதலுக்கும் பச்சைக்கொடி காட்டியதுடன் திருமணத்தையும் முழுமனதோடு விமரிசையாக நடத்தி வைத்திருக்கிறார் பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ்.
பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் இடம்பெறும் புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகளில் நடுவராகப் பொறுப்பேற்று, இளம் பாடகர்களை ஊக்கப்படுத்தி வரும் இவர், அண்மைய பேட்டியில் தனது குடும்பம் குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இனி ஸ்ரீநிவாஸ் சொல்வதைக் கேட்போம்.
“என்னுடைய இரு மகள்களின் வாழ்க்கையைவிட பணமும் சாதியும் அப்படியென்ன பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துவிடப் போகின்றன. வாழ்க்கையை அவர்களாகவே தேர்ந்தெடுக்கும் அளவுக்குப் பக்குவமானவர்களாக இரு மகள்களையும் வளர்த்திருக்கிறோம்,” என முகம் நிறைந்த மலர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் சொல்கிறார் ஸ்ரீநிவாஸ்.
இவரது இரண்டாவது மகள் சுனந்தா மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது ஒரு குறும்படத்திலும் நடித்துள்ளார்.
மூத்த மகள் சரண்யாவும் தந்தையைப் போல் நன்றாகப் பாடக்கூடியவர். பல மேடை நிகழ்ச்சிகளில் இவர் பாடுவதை நம்மில் பலர் பார்த்திருக்க முடியும்.
“ஒருவர் திறமைசாலி என்பது தெரியவந்தால், அவருக்கான வாய்ப்பை பெற்றுத்தர அப்பா தயங்கியதில்லை. இப்போதும்கூட உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்கிறார்.
“அப்பா சமூக ஊடகத்தில் தீவிர உறுப்பினர். அவரை சரியாகப் புரிந்துகொள்ளாத சிலர் கண்டபடி கருத்துகளை வெளிப்படுத்துவது வருத்தம் தரும்,” என்கிறார் சரண்யா.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், தாம் எதுகுறித்தும் பயப்படுவதில்லை என்றும் இவையெல்லாம் இயல்பாகவே நடக்கக்கூடியவை என்றும் மகளைச் சமாதானப்படுத்துகிறார் ஸ்ரீநிவாஸ்.
‘‘நான் நல்ல ஊதியம் பெறக்கூடிய வேலையில் இருந்தேன். சினிமாவுக்காக வேலையைத் துறந்தபோது என் தந்தை கோபப்பட்டார். ஆனால், மனைவி சுஜாதா நம்பிக்கையுடன் என்னை அனுப்பி வைத்தார். என் மனைவி இல்லையென்றால் நான் என்ன ஆகியிருப்பேன் எனத் தெரியாது.
“நான் சினிமாவில் தோல்வி அடைந்திருந்தாலும் இப்போது எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அதே மாதிரிதான் இருந்திருப்போம். வாழ்க்கையில் வெற்றி என்பது பணம், பெயர், புகழ் சம்பாதிப்பது மட்டுமல்ல, மகிழ்ச்சியாக இருப்பதும்தான்.
“என்னைப் பொறுத்தவரை வெறுப்பை ஓரங்கட்டிவிட்டு ஒருவருக்கொருவர் அன்பு பாராட்ட வேண்டும். ‘நான் யார் தெரியுமா?’ எனும் தொனியை காதலர்கள் மறந்துவிட வேண்டும். அதுதான் உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
“காதலுக்கு நம்பிக்கை முக்கியம். அப்படித்தான் ‘நான் உங்கள் தந்தை’ என்கிற ஈகோ இல்லாமல் செய்துவிட்டேன். அதற்குக் காரணம், என் மகள்கள் மீது இருக்கும் நம்பிக்கைதான்,” என்கிறார் ஸ்ரீநிவாஸ்.

