நல்ல நடிகனாக மாற முயற்சி செய்கிறேன்: அஸ்வின்

2 mins read
8ef74de5-886a-435b-b85b-2ed5078a71fd
அஸ்வின் குமார். - படம்: தினபூமி

இளம் நாயகன் அஸ்வினுக்கும் செய்தியாளர் சந்திப்புக்கும் ஏழாம் பொருத்தம்தான் போலிருக்கிறது.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ‘ஹாட் ஸ்பாட்-2’ படத்தில் நடித்துள்ளார் அஸ்வின். 2024ஆம் ஆண்டு வெளியான அப்படத்தின் முதல் பாகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

அப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் கேட்ட சில எக்குத்தப்பான கேள்விகள் அஸ்வினை சற்றே கோபப்பட வைத்தாலும் பொறுமையாகப் பதிலளித்தார்.

முன்பு ஒரு பேட்டியில் தம்மிடம் ஏராளமான இயக்குநர்கள் கதை சொல்ல வருவதாகவும் அவற்றைக் கேட்டு தான் தூங்கிவிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். வாரந்தோறும் 40 கதைகளை இவ்வாறு கேட்பதாக அவர் கூறியது சர்ச்சையானது. சமூக ஊடகங்களில் அஸ்வினைப் பலரும் கிண்டல் செய்தனர். செய்தியாளர்களும் விமர்சித்தனர்.

இந்நிலையில் செய்தியாளர் ஒருவர், “எப்போதும் கதை கேட்கும்போது தூங்கிவிடுகிறீர்களா அல்லது விழித்திருக்கிறீர்களா?” என்று அஸ்வினிடம் கேள்வி எழுப்ப, அவர் எரிச்சலாகிவிட்டார்.

“40 கதைகள் என்பது நான் பொதுவாக சொன்ன கணக்கு. அதற்கு அதிகமாகவும் நான் கதை கேட்டிருக்கலாம். ஒருவேளை உங்களிடம் 40 கதைகளைச் சொன்னால் தூங்காமல் இருப்பீர்களா?

“திரையரங்குகளில் பலர் தூங்குவதைப் பார்த்திருக்கிறேன். யார் மனத்தையும் புண்படுத்த வேண்டும் என நான் பேசவில்லை. அப்போதே என் தரப்பு விளக்கத்தைக் கொடுத்திருப்பேன். ஆனால் இப்போதும்கூட என்னைச் சுட்டிக்காட்டக் காத்திருக்கிறீர்கள்,” என்றார் அஸ்வின்.

தம்மை நல்ல நடிகர் என்று ஒருபோதும் சொல்லிக்கொள்வதில்லை என்றும் நடிப்பின் நுணுக்கங்களைத் தொடர்ந்து கற்று வருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நான் பணியாற்றும் அத்தனை இயக்குநர்களிடமும் நிறைய கற்றுக்கொள்கிறேன். ஒரு நல்ல நடிகனாக மாற முயற்சி செய்கிறேன்,” என்றும் அஸ்வின் தெரிவித்தார்.

ஹாட்ஸ்பாட்-2’ படத்தில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, சஞ்ஜனா திவாரி, பவானிஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் இவ்வாரம் திரைகாண்கிறது.

குறிப்புச் சொற்கள்