இந்த ஆண்டு தனுஷ், சூர்யா இருவரும்தான் அதிக படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில்தான் இப்போது கடும் போட்டி நிலவுகிறது.
2026 புத்தாண்டு பிறந்துவிட்டது. கடந்த 2025ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு விமர்சன ரீதியாகப் பெரிய வெற்றியைத் தராத நிலையில், இந்த ஆண்டு பல மாற்றங்களை எதிர்நோக்கியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை, ரஜினி - கமல் கூட்டணி, அஜித்தின் கார் பந்தயம் எனத் திரையுலகம் பரபரப்பாக உள்ளது.
தனுஷ் கடந்த ஆண்டு ‘இட்லி கடை’, ‘குபேரா’, ‘தேரே இஷ்க் மெயின்’ ஆகிய வெற்றிகளைத் தொடர்ந்து, தற்போது மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி இயக்கங்களில் நடிக்கிறார். இளையராஜாவின் வரலாற்றுக் கதை கைவிடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிக்கவிருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது.
சூர்யாவிற்கு, கடந்த சில ஆண்டுகளாகவே திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் எதுவும் நல்ல வரவேற்பை கொடுக்கவில்லை. ‘ரெட்ரோ’ படத்தை அதிகம் நம்பியிருந்த அவருக்கு, இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. ‘கங்குவா’ வெளியான வேகத்தில் திரையரங்கை விட்டு ஓடியது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ படத்தை பெரிதும் நம்பியுள்ளார். அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் மமிதா பைஜுவுடனும் ஜித்து மாதவன் இயக்கத்தில் நஸ்ரியாவுடனும் இணைந்து நடித்து வருகிறார்.
இதுதவிர, ஆண்டின் தொடக்கத்திலேயே ‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ வெளியாகின்றன. ஜூன் மாதம் ‘ஜெயிலர் 2’ அஜித்தின் 64வது படமும் வெளிவர வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு யாருக்கு வெற்றி என்பதை ரசிகர்களே தீர்மானிப்பார்கள்.

