நிதிஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து மற்றொரு ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இரு பாகங்களாக உருவாகும் அப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ராவணனாக நடிக்க யஷுக்கு ரூ. 200 கோடி சம்பளம் தரப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தொகையை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழங்கினால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக சம்பளம் பெற்ற சாதனையை யஷ் படைப்பார்.
இந்நிலையில், அப்படத்துக்காக ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து ஆஸ்கர் வென்ற பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் பணியாற்றவுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
இதுதொடர்பாக, அண்மையில் நடந்த நேர்காணலில் ரகுமானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அது ரகசியம் என அவர் பதிலளித்தார்.
தகவலை மறுக்காததால் இந்தியத் திரைத்துறையில் ஹான்ஸ் ஜிம்மர் பணியாற்றப்போவது கிட்டத்திட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.