சென்னை: நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு ஏற்பட்டுள்ள திடீர் சிக்கல் காரணமாக அப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இத்தகவலை வருத்தத்துடன் பகிர்ந்துகொள்வதாக படத்தை தயாரித்துள்ள கேவிஎன் நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
தங்களது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட, தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக பட வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதாக குறிப்பிட்டு படத்தின் தயாரிப்பு தரப்பான கேவிஎன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இதற்குப் பதில் அளித்துள்ள தணிக்கைக் குழு, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வுக்கு அனுப்புவது மத்திய அரசின் முடிவல்ல என்றும் படத்தை மறுஆய்வுக்கு அனுப்பும் அதிகாரம் தணிக்கை வாரியத் தலைவருக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அத்திரைப்படத்தில் இந்திய பாதுகாப்புப் படையின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அப்படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்றும் தணிக்கைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், பெரும்பான்மை தணிக்கைக் குழு உறுப்பினர்கள் ‘ஜனநாயகன்’ படத்துக்கு சான்று வழங்க ஆதரவு அளித்தும் தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக தயாரிப்புத் தரப்பு புகார் எழுப்பியுள்ளது.
இருதரப்பு வாதங்களை செவிமெடுத்த நீதிபதி ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்துக்கு யூ/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின்னர் மறுஆய்வுக்கு அனுப்பியது ஏன் என்றும் சான்றிதழ் வழங்க ஒப்புதல் அளிக்க குழுவைச் சேர்ந்த ஒருவரே எவ்வாறு அப்படம் குறித்து தனியாக புகார் அளிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இவ்வழக்கில் ஜனவரி 9ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.
இதனிடையே, அரசியல் காரணங்களால்தான் ‘ஜனநாயகன்’ படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தணிக்கை வாரியம் அரசியல் ஆயுதமாக மாறுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் அஜய் ஞானமுத்து, “தற்போது நடப்பது அதிகார துஷ்பிரயோகம்,” என்று கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஒரு திரைப்படத்தை தடை செய்வதால் நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுத்துவிட முடியாது என்றும் பிரதமர் மோடி அவ்வாறு செய்ய அனுமதிக்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.
நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில், ஜனநாயகன் படம் வெளியாகும் போதுதான் விஜய் ரசிகர்களுக்கு உண்மையான திருவிழா என்று கூறியுள்ளார்.
மேலும், “தடைகள் உங்களைத் (விஜய்) தடுத்ததில்லை. இதைவிடப் பெரிய புயலை எல்லாம் கடந்து வந்துள்ளீர்கள். இதுவும் கடந்துபோகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விஜய் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

