“ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது,” என மற்ற நாயகிகளைப் போலவே கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.
`வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு, ரஜினி நடிப்பில் `கூலி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதில் ஒற்றைப் பாடலுக்கு ரஜினியுடன் நடனமாடி உள்ளார் பூஜா.
இந்தப் பாடல் ரசிகர்களை நிச்சயம் கவரும் என அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட வேண்டும் என என்னைக் கேட்டபோது, கால்ஷீட் இல்லை. எனினும், ரஜினி போன்ற மிகப்பெரிய நட்சத்திரத்துடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்போது அதை உடனே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தோன்றியது.
“நான் நடனமாடிய பாடல், தமன்னாவின் ‘காவாலா’ பாடல் போல இருக்குமா எனக் கேட்கிறார்கள். நிச்சயம் அப்படி இருக்காது. இது முற்றிலும் வேறுவிதமான பாடலாக இருக்கும்,” என்று கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.
‘லியோ’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஷ்ருதிஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.