அண்மையில் வெளியான ‘மாமன்’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கிய அந்தப் படத்தில் சூரி , ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், சுவாசிகா, பாலா சரவணன் நடித்துள்ளார்கள்.
வெற்றியை ருசித்த மகிழ்ச்சியில் இருக்கும் சூரி, ராஜ்கிரணுடன் நடித்தது குறித்து தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“ராஜ்கிரணின் நடிப்பு எனது வாழ்க்கைப் பயணத்தில் மறக்கமுடியாத ஒரு மகத்தான கற்றல் அனுபவம்.
“’மாமன்’ படத்திற்கு அவரைப் போலப் பெரும் வரமாக ஒருவர் இருக்கவே முடியாது. ‘சிங்கம்’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை, அந்தப் பாத்திரத்தை முழுமையாக உணர்ந்து, ஒவ்வொரு சுவாசத்திலும் அவர் வாழ்ந்தார்.
“அவரது ஆழமான உணர்ச்சி வெளிப்பாடுகள், அந்தக் கதையின் நட்பும் நேசமும் பூரணமாகத் திரையிலே பெருகச் செய்தது.
“இந்திய சினிமாவின் வரலாற்றில் தனி இடம்பிடித்துள்ள ரஜ்கிரணுடன் ஒரு காட்சியில் மட்டுமல்ல, ஒரு முழு படத்தையே பகிர்ந்து நடிக்க முடிந்தது என் வாழ்வின் மிகச் சிறந்த ஆசிர்வாதம்.
“தன்னம்பிக்கையும் எளிமையும் நிரம்பிய அந்த மனிதரிடம் இருந்து நேரில்கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்பது, என் வாழ்க்கையில் என்றும் ஒளிரும் ஒரு பொன்னாளைப் போல் இருக்கும்,” என்று சூரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.