மறக்கவே முடியாத வலி: ரேவதி

மறக்கவே முடியாத வலி: ரேவதி

2 mins read
110c5220-3f50-4656-b5ae-19b4c3d79992
சிறுவயதில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட நடிகை ரேவதி. - படம்: ஃபிலிமிபீட் தமிழ்

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் டாப்சி, ரேவதி, கனி குஸ்ருதி, மனோஜ் பஹ்வா, குமுத் மிஸ்ரா, ஜீஷன் அய்யூப் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘அஸ்ஸி’.

மேலும், இப்படத்தில் நசிருதீன் ஷா, சுப்ரியா பதக் மற்றும் சீமா பார்கவா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படம் குறித்து நடிகை ரேவதி யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில், ‘அஸ்ஸி’ என்பது தமிழில் 80 என்று அர்த்தம். ஒவ்வொரு நாளும் இந்தியாவில், பெண்களுக்கு எதிராகக் குறைந்தபட்சமாக 80 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாத வழக்குகள் பல இருக்கின்றன. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாள். அதைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் படத்திற்கு இந்தத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தினுடைய கதையே பாதிக்கப்பட்ட பெண்ணினுடைய பயணத்தைப் பற்றித்தான்.

“சிறார்க்குப் பள்ளிகளில் ‘குட் டச் பேட் டச்’ பற்றி இப்போது சொல்லிக் கொடுக்கிறார்கள். சொல்லிக் கொடுத்தாலும் சொல்லிக் கொடுக்கவில்லை என்றாலும் நம்முடைய உடம்பிற்குத் தெரியும். அவர்கள் நல்ல எண்ணத்தில் தொடுகிறார்களா? இல்லை கெட்ட எண்ணத்தில் தடவினார்களா? என்று தெரியும். இதனால் தவறான எண்ணத்தில் ஒருவர் தொட்டால் அதைத் தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் என்பதைத்தான் நாம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம்.

“ஒரு பெண் இதுபோன்று ஏதாவது நடந்துவிட்டது என்று சொன்னால், முதலில் அவளிடம் கேட்பது, நீ எதுக்கு இந்த ஆடை அணிந்தாய்?, இவ்வாறு ஆடை அணிந்தால் அப்படித்தான் நடக்கும் என்று தான் கேள்வி கேட்கிறார்கள். இதனால்தான் பல பெண்கள் இதுபோன்ற சம்பவங்களை வெளியில் சொல்ல பயந்து அதை மனத்திற்குள் வைத்து, மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஒரு பெண்ணின் உடலை ஒருவன் தவறாகத் தொடுவது, அந்த பெண்ணால் வாழ்க்கையில் மறக்கவே முடியாத காயமாகிவிடும். இதனால், இதுபோன்ற நேரங்களில் பெற்றோர், குழந்தைகளுக்குத் துணையாக இருக்க வேண்டும். யாராவது தவறாக நடந்துகொண்டால் அவர்களை அந்த இடத்திலேயே அடித்துவிடும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

“நான் 11ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, பேருந்தில் என்னை ஒருவன் தவறாகத் தொட்டான். நான் யாருக்கும் பயப்படவில்லை. அவனை அந்த இடத்திலேயே பளாரென அறைந்தேன். அப்போது அங்கிருந்த அனைவரும் எனக்குத் துணையாக இருந்தார்கள். அந்தத் தைரியத்தை எனக்குக் கொடுத்தது என் அம்மா. யாராவது தவறாக நடந்து கொண்டால், பயப்படாமல் தைரியமாக அடி என்று அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அதைத்தான் நான் அன்று செய்தேன். இதுபோல ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் பெற்றோர் பக்கபலமாக இருக்க வேண்டும்,” என்று நடிகை ரேவதி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்