வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’. இதன் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாட்டுப் பொங்கலான புதன்கிழமையன்று இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் இத்தகவல் உறுதியானது.
தமது சமூக ஊடகப் பதிவில் புகைப்படத்துடன், “அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்’ திறக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார் தாணு.
‘விடுதலை’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியான பின்னர் எந்த நேரத்திலும் ‘வாடிவாசல்’ பட வேலைகள் தொடங்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில், ‘விடுதலை’ படத் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க, தனுஷ் நாயகனாக நடிக்கும் படத்தை வெற்றி மாறன் இயக்கப் போவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.
எழுத்தாளர் சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவல்தான் தற்போது திரைப்படமாகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டிலேயே இந்தப் படத்துக்கான பணிகள் தொடங்கிவிட்டன. முதற்கட்டமாக சோதனை முயற்சியாக மூன்று நாள் படப்பிடிப்பை நடத்திய வெற்றிமாறன் குழுவினர், ஒரு காணொளியையும் வெளியிட்டனர்.
2022ஆம் ஆண்டு அக்காணொளி வெளியானது. எனினும், அதன் பின்னர் ‘விடுதலை’ படத்தைத் தொடங்கிய வெற்றிமாறனால், பிறகு ‘வாடிவாசல்’ பக்கம் திரும்ப முடியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இத்திரைப்படத்திற்காக சூர்யா இரண்டு ஜல்லிக்கட்டுக் காளைகளை வாங்கி தனது வீட்டில் வளர்த்து வருகிறாராம். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அவ்விரு காளைகளுடன் கணிசமான நேரத்தைச் செலவிடுகிறார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ள புகைப்படம் சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.