கன்னட இயக்குநர் ப்ரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கேடி தி டெவில்’.
‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கிறது.
இந்திய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ஷில்பா ஷெட்டி, தமக்கு சென்னை மசாலா தோசை மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னார்.
“பொதுவாக எனக்கு தென்னிந்திய உணவுகள் எல்லாமே பிடிக்கும். மேலும் சென்னையையும் இங்கு இருக்கும் மக்களையும் மிகவும் பிடிக்கும்.
“தமிழில் ஏன் தொடர்ந்து நடிக்கவில்லை எனக் கேட்கிறார்கள். எனக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
“தமிழில் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது வடிவேலுதான் எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தார்.
“பின்னர், தமிழில் விஜய்யுடன் ‘குஷி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினேன். பிறகு தமிழ் சினிமாவிலிருந்து நடிப்பதற்கான அழைப்புகள் எதுவும் வரவில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு எனக்குப் பிடிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த ‘கேடி’ திரைப்படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம். தமிழ் ரசிகர்கள் இந்த அதிரடியான படத்தைக் கண்டிப்பாக ரசிப்பார்கள்,” என்றார் ஷில்பா ஷெட்டி.
இதையடுத்துப் பேசிய நடிகர் சஞ்சய் தத், “எனக்கு கமல்ஹாசன், ரஜினி மீது மிகுந்த மரியாதை உள்ளது. திரையுலகில் அவர்கள் எனக்கு மூத்தவர்கள். அவர்களிடமிருந்து பல விஷயங்களைக் கற்றிருக்கிறேன்.
“ரஜினியுடன் இந்திப் படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நான் பார்த்த மனிதர்களில் மிகவும் பணிவானவர் ரஜினி. பின்னர் விஜய்யுடனும் இணைந்து நடித்திருக்கிறேன்,” என்றவர், திடீரென இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது தாம் கோபமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதைக் கேட்டு, நிகழ்ச்சி அரங்கில் இருந்தவர்கள் பதறிப்போக, பிறகு சிரித்தபடியே, தாம் விளையாட்டாக அவ்வாறு குறிப்பிட்டதைப் புரியவைத்தார்.
“லோகேஷ் ‘லியோ’ படத்தில் பெரிய கதாபாத்திரத்தைக் கொடுக்கவில்லை. அவர் என்னை வீணடித்துவிட்டார்,” என்று மீண்டும் கிண்டல் செய்தார் சஞ்சய் தத்.
“எனக்கு அஜித்தையும் மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு நெருங்கிய நண்பரும்கூட.
“ரஜினி நடித்த பல திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். இப்போது ‘கூலி’ படத்திற்காக நான் காத்திருக்கிறேன்,” என்று கலகலப்பாகப் பேசி முடித்தார் சஞ்சய் தத்.