அன்பு மட்டுமே வாழ்க்கை என நினைப்பவன் ‘வணங்கான்’

3 mins read
ebd6dc98-4fe8-4d16-8afe-d1d7fdd0de2a
‘வணங்கான்’ படத்தின் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘அறம்’ தொகுப்பைப் படித்துக் கொண்டிருந்தபோது, அதில் இடம்பெற்றிருந்த ‘வணங்கான்’ என்ற சிறுகதையின் தலைப்பு இயக்குநர் பாலாவுக்குப் பிடித்துப்போனது.

உடனே, ஜெயமோகனைக் கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசி, அந்தத் தலைப்பை மட்டும் பயன்படுத்த அனுமதி கேட்க, ஜெயமோகனும் உடனே சம்மதிக்க, பாலாவின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பாக அது மாறியது. இதுதான் ‘வணங்கான்’ பட உருவாக்கத்தின் தொடக்கப்புள்ளி எனலாம்.

“தலைப்பே நல்ல வடிவமாக அமைந்தது. இதோ வெளியீடு வரைக்கும் வந்தாயிற்று. நிறைய படித்துவிட்டோம் என்பதோ, நிறைய படங்கள் எடுத்துவிட்டோம் என்பதோ பெரிதல்ல. எழுதுவதும் படிப்பதும் படம் எடுப்பதும் நமக்குள் ஓர் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும்.

“இந்த உள்மாற்றம்தான் மனதை விசாலமாக்கும். ‘வணங்கான்’ அப்படிப்பட்டவன். என்னைச் சீண்டாத எதையும் நான் திரைப்படமாக எடுப்பதில்லை,” என்கிறார் இயக்குநர் பாலா.

இவரது பட வெளியீட்டுக்கு முன், எப்போதுமே பெரும் எதிர்பார்ப்பு நிலவும். ‘வணங்கான்’ படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இம்முறை பாலாவால் பட்டை தீட்டப்பட்டுள்ளவர் அருண் விஜய்.

நிறைய கோபமும் முகத்தில் சிதறிய ரத்தமுமாக ரௌத்திரம் பெருக படச்சுவரொட்டிகளில் காட்சியளிக்கும் அவரது தோற்றம் மிரள வைக்கிறது.

‘வணங்கான்’ எப்படிப்பட்ட கதை?

‘‘எப்பேர்ப்பட்ட உறவாக இருந்தாலும், அது யாராக இருந்தாலும், தன் மனதுக்குள் பொத்தி வைத்திருக்கும் எதையும் யாரிடமும் அவன் சொல்லமாட்டான். சொல்லக்கூடாத ரகசியம், அந்தரங்கமான விஷயம் என எதுவாக இருந்தாலும், அவனிடம் எவ்வளவு போராடினாலும் கிடைக்காது. எதற்காக, எந்தப் பிரச்சினை வந்தாலும் எதிர்த்து நிற்பானே தவிர, எதையும் வெளியே சொல்ல மாட்டான். இதுதான் வணங்கான்.

“எனது கதையின் நாயகன் அன்பு மட்டுமேதான் வாழ்க்கை என்று நினைப்பவன். அதைத்தவிர அவனுக்கு வேறு எதுவுமே தெரியாது. அன்பும் வன்முறையும்தான் அவனுக்குத் தெரிந்தவை. ‘பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன் நான்’ என்று சீமான் அடிக்கடி சொல்வார் அல்லவா? அப்படிப்பட்டவன்தான் வணங்கான்.

“இந்தக் காலத்தில் இப்படி இருந்தால் நிம்மதியான, நிலையான இடத்தில் போய் உட்கார முடியாது. இந்த நிலைப்பாடு ஒருவனுக்கு சோகத்தைத்தான் ஏற்படுத்தும். அந்தச் சோகத்தையே மென்சோகமாக உருமாற்றி இருக்கிறேன்,” என்று நீண்ட விளக்கம் தருகிறார் பாலா.

மக்களின் வாழ்க்கையைக் கதையாக மாற்றுவதுதான் தனது படைப்புகளாக வெளிவந்துள்ளதாகக் குறிப்பிடுபவர், தன்னைப் பொறுத்தவரை கதை என்று எதுவும் கிடையாது என்கிறார்.

“தறிகெட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். அவ்வளவு அனுபவங்கள், மனிதர்கள், தரிசனங்கள் என் மனதுக்குள் உள்ளன. என்னைப் பொறுத்தவரை கதை என்று ஏதுமில்லை. எல்லாமே கதாபாத்திரங்கள்தான்.

“ஒரு காதல், ஒரு துரோகம், ஒரு பகை, ஒரு வலி, ஒரு வெற்றி என்று ஒவ்வொருவருக்குள்ளும் நடக்கும் பரமபதம்தான் எல்லாம். அப்படித் திரையில் தோன்றி உங்கள் மனதில் நிற்பான் இந்த ‘வணங்கான்’.

‘‘அருண் விஜய் ஒரே பாய்ச்சலில் நான்கு படிகளைத் தாண்டிவிட்டார். இனிமேல் அவர் படியிறங்க வாய்ப்பே இல்லை. மேலும் ஏறுவதற்குத்தான் வாய்ப்புண்டு.

“அருண் முதன்முறையாக என் பொறுப்பின்கீழ் வந்துள்ளார். எனவே நான் நல்லபடியாக மெனக்கெட வேண்டும் என்ற கடமை இருந்தது. நம்பி வந்தவர்களை ஒரு நல்ல இடத்திற்குக் கொண்டு சேர்ப்பதுதான் எனது வேலை. அதை இந்நாள் வரை 95% சரியாகச் செய்திருக்கிறேன். இந்தப் படத்துக்காக பிரமாதமான, முழு நடிகனாக மாறி வந்து நிற்கிறார் அருண் விஜய்.

‘‘கதாநாயகி ரோஷிணி பிரகாஷ் நல்ல திறமைசாலி. நல்ல கதைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்துச் செய்தால் மரியாதைக்குரிய நடிகையாகவும் எல்லோரும் தேடக்கூடிய நடிகையாகவும் மாறிவிட ஏராளமான வாய்ப்புள்ளது.

“திடீரென்று சென்னைக்கு வந்த அவரை உடனே படம்பிடித்துப் பார்த்தால், அப்படியே என் படத்தின் கதாபாத்திரமாக முன்னால் வந்து நிற்கிறார்,” என்கிறார் இயக்குநர் பாலா.

குறிப்புச் சொற்கள்