வாழ்க்கை முழுவதும் தாம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு சமாளித்து வருவதாகக் கூறியுள்ளார் நடிகர் விக்ரம்.
அந்த வகையில் ‘வீர தீர சூரன் பாகம் 2’ படத்தை திட்டமிட்டபடி வெளியீடாக்க சவாலைச் சந்தித்ததாக தாம் வெளியிட்ட ஒரு காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை (மார்ச் 27) வெளியானது இப்படம்.
படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் திரையரங்குகளுக்கு நேரில் சென்று, ரசிகர்களை சந்தித்துப் பேசி உற்சாகப்படுத்தி வருகிறார் விக்ரம்.
இந்நிலையில் இதுகுறித்து காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். “இந்தப் படத்தில் ‘ஒரே ஒரு வாழ்க்கை. அதை வரலாறாக வாழ்ந்துவிட வேண்டும்’ என்று ஒரு வசனம் பேசியிருப்பேன். ஆனால், இந்த வாழ்க்கை இருக்கிறதே... அப்பப்பா... எப்போதும் ஏதாவது பிரச்சினை வந்து நம்மைத் தூக்கி வீசி விடுகிறது. நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
“‘வீர தீர சூரன்’ படத்திற்குகூட திடீர் சிக்கல். நான்கு வாரங்களுக்கு படத்தை வெளியிட தடை விதித்தது உயர் நீதிமன்றம். அதை சமாளித்த பிறகே படம் வெளியானது.
“ஒரு படத்தின் முதல் காட்சிக்கே தடை ஏற்பட்டால், கதை முடிந்தது. அவ்வளவுதான் என்பார்கள். ஆனால் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளனர்..
“இப்போது படம் வெற்றியை நோக்கி செல்லத் தொடங்கி, நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. மனத்துக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இது ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட படைப்பு. படத்தைப் பார்த்த எல்லாருக்கும் நன்றி, பார்க்காதவர்கள் நிச்சயமாகப் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்,” என்று கூறியுள்ளார் விக்ரம்.