வாஷிங்டன்: தங்களுக்குப் பிடித்தமான நாயகர்களின் திரைப்படங்கள் வெளியீடு கண்டால் போதும். அப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்குமுன் வெடி வெடிப்பது, மேளதாளம், பதாகைகளுக்கு மாலை அணிவிப்பது, பாலூற்றுவது என ரசிகர்கள் அமர்க்களப்படுத்திவிடுவர்.
நுழைவுச்சீட்டு வாங்கி, திரையரங்கிற்குள் சென்றபின் வண்ணத்தாள் துண்டுகளைப் பறக்கவிட்டு, கொண்டாடித் தீர்ப்பர்.
இந்தியாவில் இதெல்லாம் வழக்கம்தான் என்பதால், பொதுமக்களும் அதைக் கண்டும் காணாமல் சென்றுவிடுவர்.
ஆனால், அமெரிக்காவிலும் இதேபோல் செய்து அவப்பெயரைத் தேடிக்கொண்டனர் தெலுங்குப்பட ரசிகர்கள்.
முன்னணித் தெலுங்கு நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் 'வீர சிம்ம ரெட்டி' படம் இந்தியாவில் நேற்று 12ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு நாயகியாக ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரு திரையரங்கில் அப்படத்தைக் காணச் சென்ற ரசிகர்கள், 'ஜெய் பாலையா' என்று கத்தியும் ஊதலால் ஊதியும் தாள்களைக் கிழித்துப் பறக்கவிட்டும் அலறவிட்டனர்.
காதைக் கிழிக்கும்படியாக இருந்த அவர்களின் சத்தத்தைப் பொறுக்காத திரையரங்க நிர்வாகம், படத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, அரங்கிலிருந்த ரசிகர்கள் அனைவரையும் வெளியேறும்படி அறிவுறுத்தினர்.
காவல்துறையும் வந்துவிட்டதால் ரசிகர்கள் வேறுவழியின்றித் திரையரங்கைவிட்டு வெளியேற நேர்ந்தது.
தெலுங்குப்படம் வெளியாகும் திரையரங்குகளில் ரசிகர்களின் இத்தகைய அல்லோலகல்லோலம் இடம்பெற்றது இது முதன்முறையன்று என்று அமெரிக்கக் காவல்துறை தெரிவித்தது.

