தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூகத்துக்குத் தேவையான கருத்தைச் சொல்ல வரும் ‘வேம்பு’

3 mins read
e14054a3-fb52-4993-9161-ead0b76def55
ஷீலா ராஜ்குமார். - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘திரௌபதி’, ‘மண்டேலா’ என தமது திறமையை வெளிப்படுத்த உதவும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து கச்சிதமாக நடித்து வருகிறார் நடிகை ஷீலா ராஜ்குமார்.

இவர் நடிக்கும் படங்களின் கதைக்களம் மட்டுமல்ல, அதில் ஷீலாவின் கதாபாத்திரமும் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும்.

அந்த வகையில், ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேம்பு’ படமும் தன்னைப் பற்றி ரசிகர்களை அதிகம் பேச வைக்கும் என உறுதியாக நம்புவதாகச் சொல்கிறார் ஷீலா.

“பெண்களை ஏதாவது குறைகூறிக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? ஆனால், நடைமுறையில் இதுதான் உண்மையாக இருக்கிறது.

“பெண்கள் வேறு கோள்களுக்குச் சென்று திரும்பினாலும்கூட, இன்னமும் அவர்களைச் சுட்டிக்காட்டி குறைகூறும் வழக்கம் மட்டும் மாறவே இல்லை.

“ஓர் அநியாயம் நடந்தாலும்கூட குற்றவாளியை விட்டுவிட்டு ஒரு பெண்ணின் குணத்தைச் சாடி குறைகூறுவதுதான் இந்தச் சமூகத்தின் முதல் வேலையாக இருக்கிறது.

“ஒரு பெண் தன் வீட்டில் இருக்கும்போது அங்கே தந்தை, சகோதரன் ஆகியவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். ஊரார் வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக உறவுப்பையனுக்கே திருமணம் செய்து வைக்கிறார்கள்.

“இள வயது திருமணம் அந்தப் பெண்ணின் வாழ்க்கையையும் லட்சியத்தையும் எந்த அளவுக்கு தடுத்து இடையூறு செய்யும் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.

“இப்படிப்பட்ட வேதனையான சூழலைத்தான் இந்தப் படத்தின் நாயகி வேம்பு எதிர்கொள்கிறாள்,” என்கிறார் ஷீலா.

இந்த வேதனையும் சோதனையும் உள்ள சூழலை அவள் எவ்வாறு எதிர்கொள்கிறாள், அவளால் தன் லட்சியத்தை அடைய முடிகிறதா என்பதுதான் ‘வேம்பு’ படத்தின் கதை.

இப்படத்தில் சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்தைக் கூறியுள்ளனராம்.

“இந்தப் படத்திலும் ஷீலாவின் கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பாத்திரத்தின் தன்மை அறிந்து, சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார் அவர். தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள மிகத் திறமையான, யதார்த்த நடிகைகளில் ஷீலாவும் ஒருவர்,” என்று பாராட்டுகிறார் இயக்குநர்.

படம் பார்க்கும் அனைவராலும் இந்தக் கதையுடன் தங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும் எனப் படக்குழு உத்தரவாதம் அளிக்கிறது.

ஒரு பெண்ணை இந்தச் சமூகம் எப்படி பார்க்கிறது, பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்தச் சமூகத்தில் அதையும் தாண்டி, ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார், நாயகியின் முறைப்பையனாக வரும் நாயகன் அவளுக்கு எப்படி உறுதுணையாக நிற்கிறார், அவள் வாழ்க்கையில் வெற்றிபெற எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதும் சொல்லப்பட்டுள்ளது.

“இதனால் அந்தச் சமூகத்தில் யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடியாத ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்கிறது.

“காவல்துறையோ அரசாங்கமோ தடுக்க முடியாத ஒரு விஷயம் குறித்து விரிவாக அலசியுள்ளோம். முன்னதாக இந்தச் சமுதாயத்தை நோக்கி வேம்பு பல கேள்விகளை எழுப்புவார். அவை மிக முக்கியமானவை, ஒவ்வொரு பெண்ணும் கேட்க நினைக்கும் கேள்விகளாக இருக்கும்,” என்கிறார் இயக்குநர் ஜஸ்டின் பிரபாகரன்.

‘கபாலி’, ‘தங்கலான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஹரிகிருஷ்ணன் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும், ‘பரியேறும் பெருமாள்’ புகழ் ஜானகி, ‘மெட்ராஸ்’ ஜெயராவ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நாடக, கூத்துக் கலைஞர்கள் ஆகியோரையும் சில காட்சிகளில் நடிக்க வைத்துள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர்.

இப்படத்துக்கு மணிகண்டன் முரளி இசையமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்