நம்ம வீட்டுப் பெண் என்று உரிமையுடன் குறிப்பிடும் அளவுக்கு, தமிழ் ரசிகர்களின் குடும்பங்களில் ஒருவராகிவிட்டார் சாய் பல்லவி. இந்தப் புத்தாண்டு தமக்கு ஒளிமயமாக அமையும் என உறுதியாக நம்புகிறாராம்.
மருத்துவப் படிப்பை முடித்த அவர், விரைவில் முழுநேர மருத்துவப் பணியில் ஈடுபட உள்ளார் என்றும் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்றும் அண்மைக்காலமாக ஒரு தகவல் உலா வருகிறது. ஆனால், அதற்கு இப்போது வாய்ப்பில்லை என்கிறார் சாய் பல்லவி.
“நான் மருத்துவம் படித்திருந்தாலும், இப்போது முழுநேர மருத்துவப் பயிற்சிக்கு வாய்ப்பில்லை. ஒருவேளை முழுநேர மருத்துவராகப் பணியாற்ற முடிவு செய்யும் பட்சத்தில் அதை சிறப்பாகச் செய்ய வேண்டுமென விரும்புவேன்.
“மக்களுக்கு சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இப்போதெல்லாம் யாரைச் சந்தித்தாலும், எப்போது திருமணம் என்றுதான் முதலில் கேட்கிறார்கள். அந்தக் கேள்வியைக் கேட்டாலே பயமாக இருக்கிறது.
“எனக்கு திருமணத்தில் அவ்வளவாக நம்பிக்கையில்லை. அதற்கான காரணம் என்னவென்றும் தெரியவில்லை,” என்று அங்கலாய்க்கிறார் சாய் பல்லவி.
திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் புடவை அணிவதைத்தான் விரும்புகிறார் சாய் பல்லவி. எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் தன் தாயாரைத்தான் புடவை கட்டிவிடச் சொல்வாராம்.
“நான் மருத்துவப் படிப்புக்காக ஜார்ஜியா சென்றபோது நம் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பலர் வருவார்கள் என்பதால் அவர்களை சைட் அடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், ஒரு பையன்கூட என்னைக் காதலிப்பதாகச் சொல்லவில்லை,” என்று சொல்லிச் சிரிக்கிறார் சாய் பல்லவி.
தாம் அழகாக இருப்பதாக எந்த ஆணாவது சொன்னால் அதை நம்ப மாட்டாராம். ஆனால், பெண்கள் சொன்னால் உடனே நம்பிவிடுவாராம்.
தொடர்புடைய செய்திகள்
காரணம், எல்லா ஆண்களுக்கும் எல்லா பெண்களுமே ஏதோ ஒரு வகையில் அழகாகத்தான் தெரிவார்கள் என்கிறார்.
“’அமரன்’ படத்தில் நடிக்க மிகுந்த தயக்கத்துடன்தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நமக்கு என்ன பெரிய முக்கியத்துவம் இருக்கப் போகிறது என்று நினைத்தேன். ஆனால் நடந்ததோ வேறு.
“சிவகார்த்திகேயனை இப்போதும்கூட ‘அண்ணா’ என்றுதான் அழைக்கிறேன். அவரும், ‘அப்படிக் கூப்பிடாதீர்கள். ஜோடியாக நடிக்கும்போது சங்கடமாக இருக்கும்’ என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்.
“எங்கள் வீட்டில் நான் அம்மா செல்லம். என் தங்கை பூஜா அப்பா செல்லம். அப்பா, அம்மா, தங்கை என மூவரையும் நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற பொறுப்பு எனக்கு உள்ளது. அந்த நினைப்பில் சில சமயம் ஆண்களைப்போல் நடந்து கொள்வதாக எனக்கே தோன்றும்.
“என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் என்ன நடந்தாலும் என்னுடைய மகிழ்ச்சியின் அளவு குறையாது. பொதுவாக, விளம்பரங்களை நான் அதிகம் விரும்புவதில்லை. எல்லாரும் என்னைப் பற்றி அதிகமாக பேசத் தொடங்கினால் சீக்கிரமே போரடித்துவிடும்.
“அதனால் அடக்கி வாசிப்பதுதான் நல்லது. என்னை வெறும் மாமிசப்பிண்டமாக பார்க்கும் சிலருக்காக என் உடையில், நடிப்பில் எதையும் மாற்றிக்கொள்ள மாட்டேன்.
“குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்பவர்களை அறவே பிடிக்காது. ஒரு நாள் முக்கியச் சாலை சந்திப்பில் என்னுடைய கார் நின்றபோது ஒரு சின்ன பெண்ணிடம் ஒரு ஆடவர் கேவலமாக நடந்து கொண்டார்.
“அப்போது எனக்கு ஏற்பட்ட எரிச்சலையும் கோபத்தையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது,” என்று சொல்லும் சாய் பல்லவி, ‘ரவுடி பேபி’ பாடலுக்கு நடனமாடியதுதான் தனது திரையுலகப் பயணத்தில் இதுவரை தாம் எதிர்கொண்ட பெரிய சவால் என்கிறார்.

