பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் அண்மையில் தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிலையில், அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில், அதன் பொதுக் குழுக்கூட்டத்தின்போது இந்த விருது வழங்கப்படும்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு பொதுக் குழுக்கூட்டத்தின் போது இவ்வாறு சிறப்பு செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பொதுக் குழுக்கூட்டம் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இதில் திரைப்பட நடிகை எம்.என்.ராஜத்தை கௌரவிக்க சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 1950ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர் எம்.என்.ராஜம். வில்லி, குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து, தனது நடிப்பால் பெயர் பெற்றவர். பின்னணிப் பாடகர் ஏ.எல்.ராகவனை மணந்துகொண்டார்.
மறைந்த நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துப் புகழடைந்த நடிகைகளில் இவரும் முக்கியமானவர்.