பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

2 mins read
64dce333-108a-4aec-9ed7-45c24e8d00ff
70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் முத்திரைப் பதித்தவர் சௌகார் ஜானகி. - படம்: நியூஸ் பைட்ஸ்
Google News Preferred Icon

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 94.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் தமது குணச்சித்திர நடிப்பின் மூலம் தனி முத்திரை பதித்தவர் சௌகார் ஜானகி.

கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கடந்த 1931ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் பிறந்த சௌகார் ஜானகி, சிறு வயதிலேயே வானொலி நாடகங்களில் பங்கேற்றுத் தமது கலைப் பயணத்தைத் தொடங்கினார்.

1950ல் வெளியான ‘சௌகார்’ திரைப்படம் இவருக்குப் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் ‘சௌகார் ஜானகி’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

1952ல் ‘வளையாபதி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான அவர், எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

‘புதிய பறவை’, ‘இரு கோடுகள்’, ‘எதிர் நீச்சல்’, ‘நீர்க்குமிழி’, ‘தில்லு முல்லு’ என 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

வயதான காலத்திலும்கூட கலைத்தாகம் தீராத நிலையில், நடிகர் சந்தானத்தின் ‘பிஸ்கோத்’ படத்தில் நடித்தார் சௌகார் ஜானகி.

இந்தியத் திரையுலகுக்கு ஆற்றிய சிறந்த சேவைகளுக்காக 2022ஆம் ஆண்டு இந்திய அரசு, அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

“தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி.

அவரது மறைவு திரையுலகத்திற்குப் பேரிழப்பு,” என்று முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்