மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்.
தர்மேந்திரா கெவால் கிரிஷண் தியோல் என்ற முழுப் பெயரைக் கொண்ட இவருக்கு வயது 89.
60 ஆண்டுகளாகத் தனது நடிப்புத் திறமையாலும் அழகாலும் ரசிகர்களின் மனத்தில் சகாப்தமாக வாழ்ந்தவர் தர்மேந்திரா.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நஸ்ராலி எனும் கிராமத்தில் பிறந்த தர்மேந்திரா தனது 19வது வயதில் பிரகாஷ் கோர் என்பவரை மணமுடித்தார். இருவருக்கும் சன்னி தியோல், பாபி தியோல் எனும் இரு பிள்ளைகளும் விஜேதா, அஜீதா எனும் இரு மகள்களும் இருக்கின்றனர்.
சன்னி தியோல், பாபி தியோல் இருவரும் தந்தையைப் போல் நடிகர்களாக உருவெடுத்தனர். இருவரும் ஒரு காலத்தில் பிரபலமாகத் திகழ்ந்தனர்.
பிறகு தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஹேமமாலினியையும் மணமுடித்தார் தர்மேந்திரா. இந்தத் தம்பதிக்கு இஷா தியோல், அஹானா தியோல் என இரு மகள்கள் இருக்கின்றனர். இஷா தியோலும் நடிகையாக ஆனார்.
1960ஆம் ஆண்டு ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ எனும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தர்மேந்திரா, பல பிரபலமான படங்களில் நடித்துப் பெயர் பெற்றார். 1975ல் இவர் அமிதாப் பச்சன், அம்ஜத்கான் ஆகியோருடன் இணைந்து நடித்த ‘ஷோலே’ படம் இந்தியத் திரையுலகின் ‘வைரக்கற்களில்’ ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் தர்மேந்திராவுக்கு மரியாதை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

