திரைப்படங்களில் நடிப்பதற்கு வடிவேலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் முடிந்த பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படம் மட்டும் ஒரளவுக்கு அவருக்கு கைகொடுத்தது. அதன் பிறகு அண்மையில் பகத் பாசிலுடன் இணைந்து ‘மாரீசன்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், வடிவேலை சிவாஜியுடன் ஒப்பிட்டு இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.
“தமிழ்த் திரையுலகில் சிவாஜிக்குப் பிறகு ஓர் அற்புதமான நடிகர் என்றால் என்னைப் பொறுத்தவரையில் அது வடிவேலு மட்டும்தான். அவருக்குப் படிப்பு, திரையுலகப் பின்புலம் கிடையாது,” என அண்மைய நேர்காணலில் அவர் கூறியிருந்தார்.
மேலும், “படங்களில் கதாபாத்திரங்களாகவே அவர் வாழ்வார். அவர் நகைச்சுவை நடிகர் மட்டும் கிடையாது; கதாபாத்திரமாகவே மாறக்கூடிய வல்லமை கொண்டவர்,” என வடிவேலுவுக்குப் புகழாரம் சூட்டியிருந்தார் வெற்றிமாறன்.
வெற்றிமாறன் சூரியை வைத்து ‘விடுதலை’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்திருந்தார்.
அப்படம் சூரியை வேறு ஒரு பரிமாணத்தில் ரசிகர்களுக்குக் காட்டியது.
அதேபோல் வடிவேலுக்கும் தரமான ஒரு கதையை வெற்றிமாறன் தயார் செய்து வருகிறாராம். கண்டிப்பாக வடிவேலின் திரையுலக வாழ்க்கையைப் புரட்டிப்போடும் படமாக அது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.