இப்போதெல்லாம் நல்ல இயக்குநர்கள் கிடைப்பதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது கடினமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால், ‘வேட்டையன்’ படத்தில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அவர்தான் நடித்திருப்பார் என்றார்.
“சமூகத்துக்கு நல்ல கருத்துகளைச் சொல்வதெல்லாம் நமக்கு ஒத்துவராது. நான் நடிக்கும் படங்கள் வணிக அம்சங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.
“படம் பார்க்கும் ரசிகர்கள் அதைக் கொண்டாட வேண்டும் என்று இயக்குநர் ஞானவேலிடம் சொன்னேன். அதற்கேற்ப அவர் எனக்கான கதையை உருவாக்கி உள்ளார்.
“அந்தக் காலங்களில் கதை, திரைக்கதை ஆகியவற்றை வெவ்வேறு நபர்கள் எழுதுவார்கள். வேறு ஒருவர் படத்தை இயக்குவார். ஆனால் இப்போது, இவை அனைத்தையும் ஒருவரே கவனிக்க வேண்டியுள்ளது. அதுதான் மிகவும் கடினமாக இருக்கிறது,” என்றார் ரஜினி.
எந்த இயக்குநர், கதாநாயகன் கூட்டணி அமைக்கிறார்கள் என்பதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இசை வெளியீட்டு விழா நாயகன் அனிருத்தைப் பாராட்டவும் ரஜினி தவறவில்லை.
“இந்தப் படத்துக்கு அனிருத்தான் இசையமைக்க வேண்டும் என்றார் இயக்குநர். தனது நூறு விழுக்காடு தேர்வு என்றால் அது அனிருத்தான் என்றும் கூறினார்.
“அதற்கு நான், ‘உங்களுக்கு நூறு விழுக்காடு என்றால், எனக்கு ஆயிரம் விழுக்காடு அவர்தான் வேண்டும்’ எனக் கூறினேன்,” என்று ரஜினி கூறியபோது அரங்கில் பலத்த கைத்தட்டல் இருந்தது.
முன்னதாகப் பேசிய இயக்குநர் ஞானவேல், ரஜினி படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு தமக்குக் கிடைக்க, ‘ஜெய்பீம்’ படம்தான் காரணம் என்றார்.
மேலும், அப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு அளித்த நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
“தற்போது நான் இந்த இடத்தில் நின்றுகொண்டிருப்பதற்கு சூர்யாதான் முக்கிய காரணம். எல்லோருக்கும் ரஜினி படத்தில் ஒரு ஸ்டைல், குறிப்பிட்ட காட்சி பிடிக்கும்.
“அதன்படி, எனக்கு ‘படையப்பா’ படத்தில் வரும் ஊஞ்சல் காட்சி மிகவும் பிடித்தமானது. அதை மனதிற் கொண்டுதான் இந்தப் படத்துக்கான திரைக்கதையை எழுதினேன்,” என்றார் ஞானவேல்.
ரஜினிக்குத் தெரிந்த ரசிகர்களைவிட, தெரியாத ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், அந்த ரசிகர்களில் தாமும் ஒருவர் என்றார்.
“அமிதாப் பச்சன் எப்போதெல்லாம் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கிறாரோ, அதற்கு முன்பாகவே நான் அங்கு இருக்க வேண்டும் என்பதுதான் ரஜினி எனக்கு கூறிய முதல் அறிவுரை. ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை.
“காரணம், அமிதாப் தனது கேரவேனுக்குள் செல்லவே மாட்டார். எப்போதும் ரஜினி வருவதற்கு முன்பே தாம் படப்பிடிப்புக்கு வந்துவிட வேண்டும் என்றுதான் அமிதாப் விரும்புவார்.
“இந்த இரு உச்ச நடிகர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும், ஒருவர் மற்றொருவர் மீது வைத்துள்ள மரியாதையும் வியக்க வைத்தது,” என்றார் ஞானவேல்.
விழாவில் பேசிய அனிருத், “நான் பல இசை வெளியீட்டு விழாக்களுக்குச் சென்றுள்ளேன். ஆனால் தலைவர் ரஜினி ரசிகர்களின் விசில் சத்தத்தைப்போல் வேறெங்கும் கேட்டதில்லை,” என்றார்.