தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேட்டையன் முதல் நாள்: திருவிழாவாக்கிய ரசிகர்கள்

3 mins read
83e2b574-1b36-4049-82bb-30132ca1fcab
கார்னிவல் சினிமாஸ் வளாகத்தில் முதல் நாள் முதல் காட்‌சியைக் கொண்டாடிய ரஜினி ‘அன்பு சாம்ராஜ்ஜியம்’ ரசிகர் குழுவினர். - படம்: சுந்தர நடராஜ்

‘கூட்டத்தில் ஒருவன்’, ‘ஜெய்பீம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள த சே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘வேட்டையன்’ உலகளவில் பிரம்மாண்டமாக வெளியீடு கண்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படத்தின் முதல் காட்சிக்கு கார்னிவல் சினிமாஸ் திரையரங்கினைத் திருவிழாக் கோலமாக்கினர் ‘அன்பு சாம்ராஜ்ஜியம்’ எனும் சிங்கப்பூர் ரஜினி ரசிகர் குழுவினர்.

கடந்த இரு வாரங்களாகவே வேட்டையன் ‘சைக்கிள் பேரணி’, ‘மெமொரபில்லா’ எனும் சிறு நினைவு அட்டைகள், ‘கட் அவுட்’ திறப்பு என களைகட்டிய கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வாக முதல் காட்சியினை இசை, நடன ஆர்ப்பரிப்புகளுடன் ‘கட் அவுட்டுக்கு’ மாலை அணிவித்து வரவேற்றனர்.

“பாதி திரையரங்க நுழைவுச்சீட்டுகளை வாங்கி, ரசிகர்களாக ஒன்றிணைந்து படத்தினை ரசித்தோம். தலைவர் படம்தான் எங்களுக்குத் திருவிழா,” என்றார் ஏறத்தாழ 10 ஆண்டுகளாக அக்குழுவில் இயங்கி வரும் திரு.கௌஷிக் கார்த்திகேயன்.

படம் திரையிடப்படுவதற்கு முன் அக்குழுவினர் உருவாக்கிய சிறப்புக் காணொளி திரையிடப்பட்டது. ரஜினிக்கே உரிய பாணியில் அமைந்த காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனிப்பட்ட முறையில் அமைந்த ‘மாஸ்’ காட்சிகளுக்கும் திரையரங்கமே அதிர்ந்தது.

குறி வைத்ததில் இரை விழுந்ததா?

வேட்டையன் ரஜினிக்கு மாலை அணிவித்தனர் ரசிகர்கள்.
வேட்டையன் ரஜினிக்கு மாலை அணிவித்தனர் ரசிகர்கள். - படம்: சுந்தர நடராஜ்

காவல்துறை அதிகாரி கதாநாயகன், அவருக்கு நெருக்கமானவரின் இழப்பு, படம் முழுதும் உதவி செய்து கடைசியில் உயிர் விடும் ஒருவர், ‘கார்ப்பரேட்’ வில்லன் என கோலிவுட்டில் நையப் புடைத்த கதை.

அதில் தமது பாணியில் சில கருத்துகளைச் சேர்த்துப் படைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ஞானவேல்.

வேகமும் வீரமும் கொண்ட ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ அதியனாக, தமது ‘ஸ்டைல்’ மூலம் எப்போதும் போல ரசிக்க வைக்கிறார் ரஜினி. அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா, கிஷோர், ரோகிணி, ரித்திகா சிங் என ஒவ்வொருவரும் அவரவரது கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளனர்.

வில்லனாக வரும் ராணா, அவருக்குத் துணை நிற்கும் அபிராமி ஆகிய இரு கதாபாத்திரங்களின் ஆழமும் சற்றே குறைவு.

‘என்கவுண்டருக்கு’ எதிரான கருத்து, கல்வியில் நடக்கும் ஊழல், மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நுழைவுத் தேர்வுகள் எனப் பல கருத்துகளை ஒன்றுசேர்த்து தர முயன்றதால், அவற்றின் தாக்கம் குறைந்துள்ளது.

முதல் பாதி விறுவிறுப்பாக இருந்தாலும், இரண்டாம் பாதி தொய்வடைகிறது.

நக்கல், துள்ளல் நிறைந்த ஏறத்தாழ நகைச்சுவைக் கதாபாத்திரம் போன்ற வடிவமைப்பில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார் ஃபகத் ஃபாசில். அவரது பல வசனங்களுக்குத் திரையரங்கம் சிரிப்பலையில் மூழ்கியது.

அனிருத்தின் பின்னணி இசை பல காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறது. அன்பறிவின் சண்டைக் காட்சிகள் ரசிக்க வைத்தன.

ஞானவேல் பாணி படத்தினை எதிர்பார்த்துச் சென்றோருக்குச் சற்றே ஏமாற்றம் என்றாலும் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும் ‘வேட்டையன்’.

“படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ‘மாஸ்’தான். ஃபகத், அமிதாப் என அனைவரும் ரசிக்க வைத்தனர். அடுத்தடுத்த காட்சிகளுக்கும் செல்லவிருக்கிறோம். இன்றைய தினம் ரஜினி ரசிகர்களுக்கானது,” என்றார் கௌஷிக் கார்த்திகேயன்.

“ஞானவேல் ரஜினி ரசிகர் என்பதை நிரூபிக்கும்விதமாக ஒவ்வொரு ‘ஃப்ரேமிலும்’ அவரை அழகாகக் காட்டியிருக்கிறார். சிறப்பான சம்பவம்,” என்றனர் ரஜினி ரசிகர் இணையரான சந்தோஷ்-யாமினி.

“சிறந்த கருத்துடன் ரஜினியின் ‘மாஸ்’க்கு பஞ்சமில்லாத படம். அனைவரும் குடும்பத்துடன் கண்டு களிக்க வேண்டும்,” என்றார் வேணுகோபால்.

“மிகச் சிறந்த கருத்துடன் கூடிய படம். ஒவ்வொரு நொடியையும் ரசித்தேன்,” என்றார் முகமது யாகூப்.

“இயக்குநர் அடுத்தடுத்த சிறந்த காட்சிகளால் எங்களைத் திணறடித்திருக்கிறார்,” என்றார் கௌரி சங்கர்.

குறிப்புச் சொற்கள்