சமுதாயத்தில் இருக்கும் வேறுபாட்டையும் தன்னுடைய அனுபவத்தையும் ‘லப்பர் பந்து’ படத்தில் சொல்லியிருப்பதாகக் கூறுகிறார் அப்படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.
செப்டம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் திரைப்படம் ‘லப்பர் பந்து’.
தினேஷ், ஹரிஷ் கல்யாண், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
ரப்பர் பந்து 15 ரூபாய்க்கு விற்கும்போது தொடங்கும் கதை, 55 ரூபாய்க்கு விற்கும்போது முடிகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடக்கும் உணர்ச்சிமிகு சம்பவங்களின் அழகானத் தொகுப்பு தான் இப்படம்.
கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும் கிராமங்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் என்னென்ன சுவாரசியமான சம்பவங்கள் நடைபெறும் என்பதை அழகாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார், அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.
கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் நிலவும் பாகுபாட்டை போகிறபோக்கில் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அபாரம். ‘தம்பி மாதிரி’ என்று நினைப்பதுதான் பிரச்சினை என்று இடம்பெற்றுள்ள வசனமும் சிந்திக்க வைக்கிறது.
“ஒரு ஊருக்குள் என்னென்ன சம்பவங்கள் நடக்குமோ அதெல்லாம் லப்பர் பந்து கதையில் சொல்லியிருக்கிறேன். இயக்குநர்கள் ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் சமுதாய வேறுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களது கதையில் அதன் வலி கலந்த ஆக்ரோஷம் இருக்கும். எப்போதுமே பாதிக்கப்பட்டவர்கள் சொல்கின்ற கருத்து அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். அவர்களது படைப்புக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்,” என அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தெரிவித்திருந்தார்.
“என் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களும் காட்சிகளும் நான் பார்த்தவை. எனது அனுபவத்தில் இருந்து பெற்றவை.இந்தக் கதையில் சமுதாய வேறுபாடு குறித்து நான் ஆழமாகப் பேசவில்லை,” என்றார் அவர்.

