அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் முதல் நாள் காட்சிகளுக்கான முன்பதிவுகள், விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்துக்கு இருந்ததைப் பெரிய அளவில் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகப் பல இந்திய, தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
‘கோட்’ படத்தைவிட 350 விழுக்காடு அதிகமாக ‘விடாமுயற்சி’க்கான முதல் நாள் முன்பதிவுகள் குவிந்துள்ளன.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ‘தல’ அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத்.
எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அனிருத் அஜித் படத்துக்கு இசையமைக்கிறார்.
‘விடாமுயற்சி’ வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி) வெளிவரவுள்ளது. அதற்கான முன்பதிவுகளிலேயே இதுவரை ரூ. 150 மில்லியனுக்கும் மேல் வசூல் குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் ரூ. 70 மில்லியன் வரை வசூல் ஈட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடைசியாக அஜித் நடித்த படம் ஒன்று வெளிவந்து ஈராண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. 2023ஆம் ஆண்டு ஜனவரியில் எச். வினோத் இயக்கத்தில் அவர் நடித்த ‘துணிவு’ வெளிவந்தது. விஜய்யின் ‘வாரிசு’, ‘துணிவு’ இரண்டும் ஒரே நாளில் வெளிவந்து ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தின.
அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பிறகு இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு வெளிவரவிருந்த இப்படம் சில இடையூறுகளைச் சந்தித்தது. பின்னர் இவ்வாண்டு பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து இம்மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்தைத் திரையரங்குகளில் பார்க்க ஆவலாகக் காத்திருக்கின்றனர் ‘தல’ ரசிகர்கள்.
இரு வேடங்களா?
‘விடாமுயற்சி’யில் அஜித் ரகசியமாக இரு வேடங்களில் நடித்துள்ளாரோ என்பதும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. படத்தின் டிரெய்லரில் ஒரு காட்சியில் பார்ப்பதற்கு இளம் வயது அஜித் போன்ற ஒருவர் காணப்பட்டது அதற்குக் காரணம்.
இணையவாசிகள், சமூக ஊடகப் பயனர்கள் பலர் இந்த விவரத்தை ‘அலசி’ வருகின்றனர்.
ஈராண்டுகளாக எந்தப் படமும் வெளிவராத அஜித்துக்கு ‘விடாமுயற்சி’ வெளியானதும் ஓரிரு மாதங்களிலேயே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட், பேட், அக்லி’ படமும் வெளிவரத் தயாராய் இருக்கிறது.