தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘விடுதலை 2’ ப(பா)டம்

3 mins read
fb534180-f7fa-4993-8705-234ef29a02c4
இளையர்களுக்கு அடக்குமுறை அரசியல் புரிதலை ஏற்படுத்தும் முயற்சியில் வெற்றிமாறனுக்கு ’வெற்றி’. - படம்: இணையம்

“வழிநடத்தத் தலைவன் முக்கியமல்ல, தத்துவம் தான் முக்கியம்”

“நம்மால முடியும்னு தெரிஞ்சாதான் ஒரு காரியத்தைத் தொடங்க முடியும்னா, இந்த உலகத்துல எதுவும் நடந்துருக்காது”

“நீ கூப்புடுறது இல்ல என் பேரு நான் சொல்றதுதான் என் பேரு”

“தகவல் வேற, உண்மை வேற”

“யாரங்கைய்யா சுடணும், எதுக்குங்கய்யா சுடணும்?”

“தனி மனிதன் செஞ்சாலும் அரசு செஞ்சாலும் போராளி செஞ்சாலும் கொலை கொலைதான்”

இப்படி, நெற்றிப் பொட்டில் அடிக்கும் வசனங்களுடன், அடக்குமுறைக்கு எதிரான சமூக அரசியலைத் துணிச்சலாகப் பேசியிருக்கிறது ‘விடுதலை 2’.

வெள்ளந்தியான குணத்துடன் புதிதாகப் பணியில் சேரும் காவலர் குமரேசன் (சூரி), தமிழகத்தின் அருமபுரி கிராமத்தில் சுரங்கம் கொண்டுவர முனையும் அரசை எதிர்க்கும் மக்கள் படைத் தலைவர் பெருமாளைப் பிடித்து, கைது செய்ததாக முடிந்த ‘விடுதலை 1’ படத்தின் தொடர்ச்சி ‘விடுதலை 2’.

ஒரு சாமானியக் காவலராக, வெள்ளந்தியான காதலனாக, மக்களின் தவிப்பை உணரும் மென்மையான மனமுடையவனாக, அநீதியைப் பொறுக்க முடியாத நேர்மையாளனாக, சூரியைக் கதாநாயகனாக்கி அழகு பார்த்த படம் ‘விடுதலை 1’.

இரண்டாம் பாகம் முழுவதும் பெருமாள் (விஜய் சேதுபதி) வாத்தியாருடையது. காவலர்கள் கைது செய்து ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில், பெருமாள் வாத்தியார் சொல்லும் தனது கதையே ‘விடுதலை 2’.

அநீதி நடப்பது தெரிந்தாலும், அரசு பார்த்துக்கொள்ளும் என வேடிக்கை பார்க்கும் பெருமாள் வாத்தியாருக்கு சம்மட்டி அடியாய் விழுகிறது கருப்பன் (கென் கருணாஸ்) எனும் இளையரின் கொலை.

அதைத் தொடர்ந்து, அடக்குமுறைக்கு எதிரான அகிம்சை முறை அரசியலில் தொடங்கி, அது திருப்தியளிக்காமல் திருப்பியடிக்கும் முறையைக் கையிலெடுத்துத் தலைவனாகிறார் பெருமாள் வாத்தியார்.

சற்றே தயக்கத்துடன் தொழிற்சங்க அரசியல் பேசி, பின் வீரனாக, தலைவனாக உருவெடுக்கும் கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார் விஜய் சேதுபதி. இளைய வயது, முதிய தோற்றம் இரண்டிலும் கச்சிதம்.

கிராமம், காதல், ஏற்றத்தாழ்வு அரசியல், போராட்டம், அடக்குமுறை, கம்யூனிச சித்தாந்தங்கள் என அவர் விவரிக்கும் கதையில் உணர்வுகளைவிட நீளமான வசனங்கள் அதிகம்.

தலைவர் தரும் முதல் பொறுப்பை ஏற்பதில் வரும் தயக்கம், சக ‘தோழர்களின்’ மரணத்தில் அழுகை, தலைவரின் மரணம் தந்த அதிர்ச்சியில் புலம்பல், நிர்வாணத்தில் கூனிக் குறுகாமல் கால் மேல் கால் போட்டுக் காவல் அதிகாரிகளைப் பெயரிட்டு அழைக்கும் எகத்தாளம் என உணர்வுகளின் பிரதிபலிப்பாக மிளிர்கிறார். பழைய கணக்கைத் தீர்க்கும் ஒரு கொலையைத் தவிர பிற இடங்களில் கதாநாயகத்தனம் குறைவு.

குறைந்த நேரமே வந்தாலும், இறுதிக் காட்சியில் கைத்தட்டலை அள்ளிப்போகிறார் சூரி.

கம்யூனிச சித்தாந்தம் பேசும் முதலாளி வர்க்க வாரிசு மகாலட்சுமியாக மஞ்சு வாரியர் அழகாகப் பொருந்திப்போகிறார்.

அகங்காரத்தின் உச்சமாக, தன் பெருமையைக் காக்க கொலை செய்யவும் தயங்காத ‘ராகவேந்திரனாக’ சேத்தன் படத்திற்குப் பெரும் பலம். அதிகார வர்க்கத்தின் மமதைக்குச் சான்றாக வரும் பண்ணையார்கள் கதாபாத்திரங்களில் வலு குறைவு. அரசு அதிகாரிகளான ராஜீவ் மேனன், கவுதம் வாசுதேவ் மேனன், அமைச்சராக இளவரசு ஆகியோர் செயற்கைத்தனமின்றி அசாத்தியமாகப் பொருந்திப் போகின்றனர்.

கம்யூனிசத் தலைவராகக் கிஷோர் சிறப்பாக நடித்திருந்தாலும், தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது சலிப்பை வரவழைக்கிறது. ஒரே சிக்கலைக் கையாண்ட இடதுசாரி அமைப்புகளிடம் கையாண்ட முறைகளினால் ஏற்பட்ட பிரிவினையைப் போகிற போக்கில் காட்‌சிப்படுத்தியது கவனிக்க வைத்தது. பிற காவலர்கள், தோழர்களின் நடிப்புக்கு ‘சபாஷ்’ போடலாம்.

காடு, மலை, கிராமம் என அனைத்தையும் கண்முன் நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். இளையராஜா இசை கதைக்குப் பலம். 80களின் உடைகள், வாகனங்கள் அந்தக் காலகட்டத்தைக் கண்முன் நிறுத்தியது.

ஆதிக்கத்தின் அகோர முகத்தைக் காட்டும் முயற்சியிலும், இடதுசாரி, பொதுவுடைமைச் சித்தாந்தங்களைக் காட்சிப்படுத்துவதிலும் வெற்றியடைந்திருந்தாலும், ஒரு விறுவிறுப்பான, ரசிக்கும்படியான, தனக்கே உரிய பாணியில் படம் கொடுக்கத் தவறியது வெற்றிமாறன் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது.

எதற்கும் வன்முறையோ கொலையோ தீர்வன்று எனும் நிதர்சனத்தை ஆணித்தரமாகச் சொல்லத் தவறியதும், வெற்றிமாறனின் பாணியில் சமகாலட் சமூகத்திற்கு அவசியமான கருத்தினைச் சொல்லாமல் விட்டதும் நெருடல்.

ரசிகர்கள் ஆரவாரிக்கும் காட்சிகள் இல்லாததும், அதீத வசனத்துடன் படம் பாடமாகியிருப்பதும் முழுமையற்ற உணர்வினையே தந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்