நடிகை வித்யா பாலன் அளித்துள்ள அண்மைய பேட்டி திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடல் எடை அதிகரித்து, பருமனாக காட்சி அளித்ததால், ஒருகாலகட்டத்தில் தாம் எதிர்கொண்ட உருவகேலி குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதேசமயம் உடல் எடையைக் குறைத்தபிறகு தனது சினிமா தொழில், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அந்தப் பேட்டியில் வித்யா பாலன் விவரித்துள்ளார்.
“எல்லோரும் உடல் எடையைக் குறைப்பதற்காக தீவிர உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால் எனக்கு இவ்விஷயத்தில் எல்லாம் தலைகீழாக நடந்தது. எந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்வேனோ அந்த அளவுக்கு உடல் எடை அதிகரித்தது.
“இதனால் குழம்பிப்போன நான் மருத்துவக்குழுவை அணுகி ஆலோசனை கேட்டேன். அவர்களால் என் உடலில் உள்ள பிரச்சினையைக் கண்டறிய முடியும் என நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. சில பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் என் உடல் எடை அதிகரிக்க காரணம் கொழுப்பு அல்ல என்றும் வீக்கம் காரணம் என்றும் கண்டறிந்தனர்,” என்கிறார் வித்யா பாலன்.
உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க மருத்துவக்குழு அறிவுறுத்திய உணவு முறையைப் பின்பற்றியதாக குறிப்பிட்டுள்ள வித்யா பாலன், தற்போது தாம் உடல் எடை குறைந்து மேலும் அழகாக இருப்பதாகப் பலரும் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுவரை இவருக்கு வழங்கப்படாத பல்வேறு கதாபாத்திரங்களை இயக்குநர்கள் வழங்குகிறார்களாம். இந்த மாற்றம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் வித்யா பாலன். முன்னதாக கடந்த 2003ஆம் ஆண்டு ‘பாலோ தேகோ’ என்ற வங்காள திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், தனது திறமையாலும் கடும் உழைப்பாலும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ச்சி கண்டார்.
இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தென்னிந்திய மொழிப் படங்களில் கவனம் செலுத்தியும் ஒரு படம்கூட உருப்படியாக முடியவில்லை என்று அங்கலாய்க்கும் வித்யா பாலன், தம்மை ராசியில்லாத நடிகை என முத்திரை குத்த சிலர் முயற்சி செய்வதாகச் சாடுகிறார்.
“மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடித்தேன். அச்சமயம் ஏழெட்டு புதுப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் சில காரணங்களால் மோகன்லாலுடன் நடித்த படம் பாதியில் நின்றுபோனது. இதை காரணமாக வைத்து நான் ராசியற்ற நடிகை என்ற பேச்சு கிளம்பியது.
“இதனால் என் மனம் வேதனை அடைந்த நிலையில், நான் ஒப்பந்தமான படங்களில் இருந்து தடாலடியாக நீக்கப்பட்டேன். மலையாளத்தில் நான் நடித்த இரண்டு படங்கள் ஐம்பது விழுக்காடு முடிந்த நிலையிலும், நான் நீக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியவில்லை,” என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, தனது தன்னம்பிக்கை மிகவும் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒரு முக்கியமான தமிழ்ப் படத்தில் இருந்தும் தாம் நீக்கப்பட்டது பலருக்குத் தெரியாது எனக் கூறியிருப்பது கோடம்பாக்க வட்டாரங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இவர் நடித்துள்ள ‘பூஃல் புலையா’ என்ற இந்திப்படம் நவம்பர் 1ஆம் தேதி வெளியாகி சக்கைப்போடு போடுகிறது. இதுவரை அந்தப் படம் ரூ.222 கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளதாம்.
இதனால் வித்யா பாலன் மிகுந்த உற்சாகத்தில் மூழ்கியுள்ளார்.
“நான் இன்று உள்ள நிலையை எட்டிப்பிடிக்க மிகவும் கடினமாக உழைத்துள்ளேன். என்னை நன்கு புரிந்துகொண்டவர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும் இது நன்கு தெரியும். போராட்டங்கள் இல்லாமல் வாழ்க்கையில் எதுவும் சாத்தியமாகாது.
முன்பு ‘டர்டி பிக்சர்ஸ்’ படத்தில் நடித்தபோது கடும் விமர்சனங்களுக்கு ஆளானேன். என்னைப்போல் திரையுலகில் சாதிக்கும் கனவுகளோடு நடிக்க வந்த நடிகை, சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி உருவான அந்தப் படத்தில் நான் நடித்ததில் என்ன தவறு? அன்று முதல் விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படுவதே இல்லை.
“நம் வேலையை நாம் சரியாகவும் உண்மையாகவும் செய்தால் போதும். மற்ற அனைத்தும் நல்லவிதமாக நடக்கும் என்பதை முழுமையாக நம்புகிறேன்,” என்கிறார் வித்யா பாலன்.