தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முழு வீச்சில் நடைபெற்று வரும் விஜய் ‘69’ படப்பிடிப்பு

2 mins read
3497d89e-c08f-4816-b11a-917f03c02b9c
விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல். - படம்: ஊடகம்
multi-img1 of 2

கட்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு, தனது ‘69’வது படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் விஜய்.

ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.

சென்னைக்கு அருகே உள்ள பையனூர் பகுதியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ‘தளபதி 69’ எனத் தற்காலிகமாக குறிப்பிடப்படும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

ஜனநாயகத்துக்கான தீப்பந்தத்தை ஏற்றும் கதை இது என்ற அறிவிப்புடன் வெளியான இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், பையனூர் படப்பிடிப்பில் இந்தி நடிகர் பாபி தியோல் பங்கேற்றுள்ளதாகத் தெரிகிறது. அனல் அரசு அமைக்கவுள்ள சண்டைக்காட்சிகள் ரசிகர்களை மிரள வைக்கும் வகையில் இருக்குமாம்.

இது எல்லோருக்கும் பிடித்தமான விஜய் படமாக இருக்கும் என இயக்குநர் ஹெச்.வினோத் ஏற்கெனவே கூறியிருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லாத வகையில் திரைக்கதை, காட்சிகளை அமைத்துள்ளாராம். இதனால் விஜய்க்கு மிகுந்த மனநிறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பையனூர் பகுதியில் இந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துக்குச் சொந்தமான இடத்தில்தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கலை இயக்குநர் செல்வகுமார் கைவண்ணத்தில் பாடல் காட்சிக்கான பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு முதற்கட்டமாக ஒரு பாடலைப் படமாக்கி முடித்துள்ளனராம். விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட இந்த டூயட் பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த 4ஆம் தேதியில் இருந்து பையனூரில் மற்றொரு பகுதியில் அமைக்கப்பட்ட அரங்குகளில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். இம்முறை பாபி தியோல் சம்பந்தப்பட்ட வசனக்காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

‘தளபதி 69’ படத்தை கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம்தான் தற்போது கன்னடத்தில் ‘கே.ஜி.எஃப்’ நடிகர் யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படத்தைத் தயாரிக்கிறது. இதற்கு முன்பு ‘ஆர்ஆர்ஆர்’, ‘அனிமல்’, ‘கல்கி’, ‘சீதாராமம்’ ஆகிய படங்களில் கன்னட விநியோக உரிமையை வாங்கி வெளியிட்ட நிறுவனம் இது.

இப்போது சூர்யாவின் ‘கங்குவா’ பட விநியோக உரிமையையும் இந்த கேவிஎன் நிறுவனம்தான் கைப்பற்றியுள்ளதாம். வரும் 14ஆம் தேதியன்று உலகெங்கும் வெளியீடு காண உள்ளது ‘கங்குவா’. அதன் பின்னர் ‘தளபதி 69’ குறித்த புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்