மகள் நினைவாக காலணி அணியாத விஜய் ஆண்டனி: மனைவி உருக்கம்

மகள் நினைவாக காலணி அணியாத விஜய் ஆண்டனி: மனைவி உருக்கம்

1 of 2
கோப்புப் படம்: விஜய் ஆண்டனி/ஃபேஸ்புக்
கோப்புப் படம்: நியூஸ்9லைவ்

20 Nov 2026 - 2:39 pm

2 mins read

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் இசை, முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மு.மாறன் இயக்கியுள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இவ்விழாவில், தனது மூத்த மகள் மீராவின் மறைவுக்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவந்த விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி, முதல்முறையாகப் பங்கேற்று மேடையில் உருக்கமாகப் பேசினார்.

அப்போது அவர், விஜய் ஆண்டனி இதுவரை வெளியுலகத்துக்குச் சொல்லாத நெகிழ்ச்சியான ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“மூத்த மகள் மீரா மறைந்த பிறகு நான் எந்தத் திரைப்பட விழாவிலும் கலந்துகொள்ளவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். விஜய் ஆண்டனி தற்போது செருப்பு அணிவதில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

“எங்கள் மகள் மீரா கல்லூரிக்குச் செல்வதற்காக 50க்கும் மேற்பட்ட காலணிகளை வாங்கி வைத்திருந்தோம். ஆனால், இறுதிப் பயணத்தின்போது செருப்பு இல்லாமல் அவளை வழியனுப்பினோம். அதனைப் பார்த்த விஜய் ஆண்டனி, அன்று முதல் வாழ்க்கை முழுவதும் செருப்பு அணிவதில்லை எனச் சபதம் ஏற்றார்.

“இசை நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வேறு வழியின்றி அணிவார். வெளிநாடுகளில்கூட வெறுங்காலுடன்தான் நடக்கிறார்,” என்று பாத்திமா கண்கலங்கத் தெரிவித்தார்.

மேலும், தனது விலையுயர்ந்த திறன் கைக்கடிகாரங்களைத் (ஸ்மார்ட் வாட்ச்) தவிர்த்துவிட்டு, மீரா பயன்படுத்திய 3,900 ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரத்தையே விஜய் ஆண்டனி தற்போது அணிந்திருப்பதாக அவர் கூறினார்.

“அந்தக் கைக்கடிகாரம் மகள் மீராவுடையது. மகளே தன் உடல்நிலையைப் பார்த்துக்கொள்வாள்,” என விஜய் ஆண்டனி கூறுவதாக பாத்திமா குறிப்பிட்டார்.

மீரா பயன்படுத்திய அறை இன்னும் அவரது நினைவாக அப்படியே இருப்பதாகவும் விரைவில் அதனைத் தங்கள் அறையாக மாற்ற உள்ளதாகவும் தெரிவித்த பாத்திமா, வீட்டில் விஜய் ஆண்டனி மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்றும் பகிர்ந்துகொண்டார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மேடையில் பேசிய பாத்திமாவின் இந்த உருக்கமான உரை அரங்கில் இருந்தவர்களையும் ரசிகர்களையும் பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்