சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியானது.
ஹைதராபாத்தில் நடந்த அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் தெலுங்கு முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசிய சில தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
விஜய் தேவரகொண்டாவிடம் கடந்த காலத்திற்குச் சென்று யாரையாவது சந்திக்க விரும்புகிறீர்களா? என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.
அதற்கு,‘‘நான் ஆங்கிலேயர்களைச் சந்தித்து, அவர்களின் கன்னத்தில் இரு அறைகள் கொடுக்க விரும்புகிறேன்,” என அவர் கூறியுள்ளார்.
மேலும், ஔரங்கசீப் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா இப்படி பேசியதும் சூர்யாவின் முகம் மாறிப்போனது. அவர் அதிர்ச்சி அடைந்தார். தமது படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தேவையில்லாமல் அவர் ஏன் அரசியல் பேச வேண்டும் என்பதுபோன்றும் இதனால் ஒரு தரப்பும் தமது படத்துக்கு எதிராக மாறலாம் என்பதாலும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.