1970களின் இறுதியில் தொடங்கி இன்றுவரை தமிழ்த் திரையுலக இசையில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் இளையராஜா.
ஓடாத படத்தையும் தமது இசையால் ஓட வைப்பார் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான அவர், முதல் படம் இயக்கும் இயக்குனர்களுக்குச் சம்பளம் வாங்காமல் இசை அமைத்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட அவர் கண்டிப்புடன் இருக்கும் ஒரே விவகாரம் காப்புரிமை தொடர்புடையதுதான். தான் இசையமைத்த பாடல்களை மற்றவர்கள் தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்த அவர் அனுமதிப்பதில்லை.
தனது அனுமதியின்றிப் பயன்படுத்தினால் அதற்குக் காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்வேன் என அவர் கூறி வருகிறார். இதனால் அவர்மீது கடுமையான விமர்சனங்களும் இருந்து வருகின்றன.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்பொனி இசைக்காக லண்டன் சென்ற இளையராஜாவிடம் செய்தியாளர் ஒருவர், தேவா தமது பாடலுக்குக் காப்புரிமை கேட்பதில்லையே எனக் கேள்வியெழுப்பினார்.
அந்தச் செய்தியாளரின் செயலுக்கு இசையமைப்பாளர் தேவா வருத்தம் தெரிவித்துள்ளார்.
“இளையராஜா எனக்குக் குரு போன்றவர். அவர் சாதனை புரியவேண்டும் என எண்ணி லண்டன் செல்கிறார். அவரிடம் இவ்வாறு கேள்வி கேட்பது நியாயமற்றது,” எனத் தேவா கூறியுள்ளார்.
மேலும், செய்தியாளரின் அச்செயலுக்காக நான் இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.