மலேசியாவுக்குப் படையெடுக்கத் தயாராகும் விஜய் ரசிகர்கள்

மலேசியாவுக்குப் படையெடுக்கத் தயாராகும் விஜய் ரசிகர்கள்

3 mins read
c4d0636c-8cc1-4dc1-bd6d-c4bdd9212291
விஜய். - படம்: ஊடகம்
multi-img1 of 2
Google News Preferred Icon

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே சில விவகாரங்களும் தலைதூக்கி உள்ளன.

மலேசியாவின் புத்ரஜெயா பகுதியில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதாகத்தான் முதலில் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால், சில காரணங்களால் புக்கிட் ஜலீல் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் முன்னிலையில் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக நடைபெற இருப்பதாகத் தகவல்.

அதுமட்டுமல்ல, இது வெறும் இசை வெளியீட்டு விழாவாக மட்டும் இருக்காதாம். இசையமைப்பாளர் அனிருத்தின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த கச்சேரியினூடே இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு சங்கர் இயக்கத்தில், விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் இதே போன்றுதான் நடந்தது.

அச்சமயம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் கச்சேரியின்போது இசை வெளியீட்டை நடத்தினர்.

இந்த ஏற்பாட்டை அப்படியே பின்பற்ற விஜய்யும் சம்மதித்துள்ளதாகத் தகவல்.

இதனிடையே, இந்த இசை வெளியீட்டிற்கு எனத் தனியாக நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட உள்ளன. இதென்ன.. இதுவரை இல்லாத புது விஷயமாக இருக்கிறதே என்று இப்போதே சில தரப்பினர் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

இதற்கான விளக்கமாகத்தான், அனிருத் கச்சேரியின்போது இசை வெளியீட்டை நடத்துகிறோம். இந்தக் கச்சேரியில் விஜய் நடித்துள்ள பாடல்கள் பல இசைக்கப்பட உள்ளன.

‘ஜனநாயகன்’ விஜய்யின் 69வது படம். இதற்கு முன்பு அவர் நடித்த 68 படங்களில் இருந்து 35 பாடல்களைத் தேர்வு செய்து, அவற்றைத் திரையில் பாடியவர்களையே நேரில் வரவழைத்து மேடையேற்றப் போகிறார்கள்.

இந்தப் பாடல்கள் பட்டியலில் ‘காதலுக்கு மரியாதை’ படப் பாடல்கள் இடம்பெற வேண்டுமென ரசிகர்கள் விரும்பக்கூடும்.

எனினும், இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்கள் என்பதால் அவரிடம் அனுமதி பெற வேண்டியது அவசியமாகிறது.

இதனிடையே, ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியைக் காண விஜய் ரசிகர்கள் மலேசியாவுக்குப் படையெடுக்கத் தயாராகி வருகின்றனர்.

ரசிகர்களின் ஆர்வத்தை அறிந்த சில டிராவல்ஸ் நிறுவனங்கள், மனதைக் கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதற்காக சில விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள கோவா நகருக்குச் சென்று திரும்பச் செலவிடும் தொகையுடன் கூடுதலாக ஆயிரம் ரூபாய் செலவிட்டால் மலேசியாவுக்கே சென்று திரும்பலாம் என்கிறது ஒரு விளம்பரம்.

இதனிடையே, ‘ஜனநாயகன்’ படக்குழுவுடன் விஜய்யின் தவெக நிர்வாகிகள், செய்தியாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் அடங்கிய குழு ஒன்று வரும் எனக் கூறப்படுகிறது.

இதன் மூலம் இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசியல் குறித்துப் பேசப்படும் என்பது தெளிவாகிறது. எனினும், விஜய் உள்ளிட்டோர் மிகச் சுருக்கமாகத்தான் பேசுவார்களாம்.

மலேசியாவில் நடைபெறும் இசை நிகழ்ச்சி, அங்குள்ள ஏராளமான விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

அங்குள்ள பிரபல மாலிக் ஸ்டிரீம்ஸ் நிறுவனம்தான் இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

எனவே, பிரம்மாண்டத்துக்குப் குறைவிருக்காது என்கிறார்கள்.

தற்போது அரசியல் மேடைகளில் தனது எதிரிகள் குறித்து காரசாரமாகப் பேசி வருகிறார் விஜய்.

எனவே, மலேசியாவில் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனினும், அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்படும் வகையிலேயே அவரது உரை அமைந்திருக்கும், சட்டத்தை மீறும் வகையில் விஜய் செயல்பட மாட்டார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்