எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை.
‘ஜனநாயகன்’ வெளியாகாததால் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடு காணும் எனப் படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்தார்.
ஆனால், பொங்கலுக்கு வெளியாகும் புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் ‘தெறி’ படத்தின் மறுவெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு, தாணு இணங்கினார்.
இதையடுத்து, படம் வருகிற 23ஆம் தேதி மறுவெளியீடு காணும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில், ‘தெறி’ படம் மீண்டும் ஒத்திவைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகத் தயாரிப்பாளர் தாணு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது.
“புதிய இயக்குநர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே தனது நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு ‘தெறி’ திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மோகன் ஜி வேண்டுகோள்
இதற்கு முன்னர் ‘திரௌபதி 2’ பட இயக்குநர் மோகன் ஜி, ‘தெறி’ படத்தின் மறுவெளியீட்டை ஒத்திவைக்கச் சமூக ஊடகத்தின்வழி வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து அவர், “வளர்ந்து வரும் குழுவினர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ‘தெறி’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்குமாறு திரு தாணுவிடம் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புடைய செய்திகள்
“அவர் புதிய தயாரிப்பாளர்களுக்கும் வளர்ந்துவரும் இயக்குநர்களுக்கும் பல நன்மைகளைச் செய்துள்ளார். எனவே, ‘திரௌபதி 2’ திரைப்படம் முக்கியத் திரையரங்குகளில் வெளியாக ஆதரவளித்து உதவுங்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.

