‘கருப்பு’ படத்தில் நடிக்க மறுத்த விஜய்

‘கருப்பு’ படத்தில் நடிக்க மறுத்த விஜய்

2 mins read
9f5d2db7-2803-4472-bbc7-75029430908a
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ படம் வசூலில் சாதனை நிகழ்த்தி வருகிறது. - படம்: ஆதவன் நியூஸ்

தற்போதைய தமிழகத்தின் முதலமைச்சரான ஜோசப் விஜய், முன்னதாக ‘கருப்பு’ படத்தில் நடிக்க மறுத்திருந்தார்.

அது பற்றி அப்படத்தின் இயக்குநரான ஆர்.ஜே.பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

“கருப்புதான் விஜய் சாரின் கடைசிப் படமாக இருந்திருக்க வேண்டியது. ‘கருப்பு’ தொடர்பாக நான் அவரை இரண்டு, மூன்று முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அது, அவர் அரசியலுக்கு வரும் நேரமாக இருந்தது. அதனால், கடைசிப் படம் குறித்த முக்கிய முடிவை எடுக்கவேண்டிய நிலையில் இருந்தார் விஜய் சார்.

“கருப்பா, ஜனநாயகனா என்றபோது ஜனநாயகனைத் தன் கடைசிப் படமாகத் தேர்வு செய்தார். அதற்கு அவர் சொன்ன காரணங்கள் ரொம்பவே நியாயமானதாக இருந்தன.

“அதனால், என் படத்தில் நடிக்க முடியாது என்று அவர் சொன்னதைக் கேட்டதும், ‘சார், உங்களின் முடிவை நான் மதிக்கிறேன். மிக்க நன்றி’ என்றேன்,” என்று பாலாஜி கூறிய செய்தியை ‘சமயம்' இணையத்தளம் வெளியிட்டது.

“விஜய் சாரிடம் சொன்ன கதையை சூர்யா சாரிடம் சொல்ல முடியுமா எனத் தயாரிப்பாளர்கள் கேட்டார்கள். நான் கதை சொன்னதும் இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று சூர்யா சார் தெரிவித்தார். கதை வசனத்தில் சில மாற்றங்களை மட்டும் செய்யச் சொன்னார்,” என்றார் பாலாஜி.

இதற்கிடையே, ஆர்.ஜே. பாலாஜியைத் தொலைபேசியில் அழைத்து ரஜினிகாந்த் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“படம் சூப்பர், சூப்பர், சூப்பர். சாதிச்சிட்டீங்க. சீக்கிரமாகச் சந்திப்போம்,” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளாராம்.

இது குறித்துப் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, “ரஜினிகாந்த் சாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரும் என்று காத்திருந்தேன். அதே மாதிரி அவர் அழைத்தார். ஒரு படம் நன்றாக இருந்தால் அவர் தொலைபேசி மூலம் அழைத்துப் பாராட்டுவார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இது சூர்யா சாருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. அவரிடம் இருந்து எனக்கு நிறைய அன்பு கிடைத்திருக்கிறது,” என்றார்.

சூர்யா, திரிஷா கிருஷ்ணன் நடிப்பில் மே 15ஆம் தேதி வெளியான ‘கருப்பு’ படம் 13 நாள்களில் உலக அளவில் ரூ.258 கோடி வசூல் செய்துள்ளது.

இந்தியாவில் மட்டும் அந்தப் படம், ரூ.163.2 கோடி வசூல் செய்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தில் மட்டும் ரூ.3.3 கோடியும் உலக அளவில் ரூ.1 கோடியும் வசூலாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசூர்யாரஜினிகாந்த்