தாம் நடிக்கும் படங்களில் ஒரு பாடலைப் பாடுவது விஜய்யின் வழக்கம்.
பாடுவதில் அவருக்கு ஆர்வம் உள்ள போதிலும், நல்ல பாடகர் என்று பெயர் வாங்குவதற்காக அல்லாமல், ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அவரது நோக்கமாக இருந்தது.
இந்நிலையில், விஜய்யின் கடைசிப் படம் எனக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ படத்தில், அவர் தனது சொந்தக் குரலில் பாடப் போவதில்லையாம்.
இதை இயக்குநரிடமும் தயாரிப்புத் தரப்பிடமும் அவர் தொடக்கத்திலேயே கூறிவிட்டாராம். சற்று தீவிரமான கதைக்களத்துடன் உருவாகி வருவதால், பாடல்கள் வேறு விதத்தில் அமைவதால், விஜய் இவ்வாறு முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ‘கில்லி’ படத்தின் மறுவெளியீட்டின் மூலம் கணிசமான லாபம் கிடைத்ததை அடுத்து, பலரும் தத்தமது வெற்றிப்படங்களை
நவீனத் தொழில்நுட்பத்துடன் மறுவெளியீடு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ‘ஆளவந்தான்’ படத்தைத் தொடர்ந்து, ‘சச்சின்’ படத்தை மறுவெளியீடு செய்தார் தயாரிப்பாளர் தாணு.
ஆனால், ‘சச்சின்’ படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. காரணம், ‘குட் பேட் அக்லி’ புதுப்படம் என்பதால் பொதுவான ரசிகர்களின் பார்வை அஜித் படத்தின் பக்கம் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அஜித் ரசிகர்கள் இரட்டிப்புக் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இதற்கிடையே, மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தைத் திரைக்குக் கொண்டு வருவதற்கான வேலைகள் நடக்கின்றன. இது விஜயகாந்தின் நூறாவது படமாகும்.
பெரிய வெற்றியைப் பெற்ற படம் என்பதால் தமிழகம் முழுவதும் 500 திரையரங்குகளில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது தயாரிப்பாளர் தரப்பு.