இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படம் குறித்த அண்மையத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியும் சாய் பல்லவியும் இணைந்து நடிக்க உள்ளனர்.
படத்தின் தலைப்பு, கதை உள்ளிட்ட இதர தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இப்படத்தில் நடிக்க சாய் பல்லவி முதலில் சம்மதிக்கவில்லையாம். முழுக் கதையையும் கேட்ட பின்னர், தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கூறி அவர் மறுத்துவிட்டதாகத் தகவல். பின்னர் சில மாற்றங்களைச் செய்து, அதே கதையைக் கூறியபோது நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
ஆனால், மணிரத்னம் கால்ஷீட் ஒதுக்கக் கேட்டபோது எந்தவிதத் தயக்கமும் இன்றி உடனடியாக அவர் கேட்ட தேதிகளை ஒதுக்கிவிட்டாராம் விஜய் சேதுபதி. இத்தகவலை அறிந்த தமிழ்த் திரையுலகத்தினர் மத்தியில் ஆச்சரியம் நிலவுகிறது.
சேதுபதி எப்போது தூங்குகிறார், ஒரே சமயத்தில் எத்தனை படங்களில் நடிக்கிறார் என்று யாருக்கும் எதுவும் தெரியாது. அவரால் எப்படி ஒரு கதை பிடித்த மாத்திரத்தில் அதற்காக கால்ஷீட் தர முடிகிறது என நெருக்கமான நண்பர்களே வியந்து போகிறார்கள்.
மேலும், தக்லைஃப் படத்தின் படுதோல்விக்குப் பிறகு, சிம்பு கைவிட்ட நிலையில், மணிரத்னத்துக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் சேதுபதி.
அநேகமாக அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் மணிரத்னம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

