'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.
ஏனெனில், சூப்பர் ஸ்டாரான அவர் தம்மிடம் மென்மையாகவும் இனிமையாகவும் நடந்துகொண்டதாக விஜய் சேதுபதி கூறினார். 'ஜவான்' படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதி சௌகரியமாக உணர ஷாருக்கான் உதவினாராம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தளத்திற்கு விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், "அவர் (ஷாருக்கான்) மிகவும் இனிமையாக இருந்தார். இது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. முதல் நாள் நான் சற்று பதற்றமாக இருந்தேன், ஏனென்றால் அவர் ஒரு பெரிய கலைஞர், ஆனால் நான் சௌகரியமாக உணர்வதை அவர் உறுதி செய்தார்.
"அன்று அவருக்கு காட்சிகள் இல்லை, ஆனால் அவர் என்னை வசதியாக உணரவைக்க படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார். நான் அவருடன் உரையாட முடியும். அவர் ஒரு ஜென்டில்மேன்; ஷாருக் சாருடன் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்," என்று கூறினார்.
"உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் மன்னித்துவிடுங்கள் சார் எனச் சொன்னேன்," என்று நினைவுகூர்ந்த விஜய் சேதுபதி, "அதற்கு அவர், இல்லை விஜய், பரவாயில்லை செய்யுங்கள் என்று கூறுவார்," என்றார்.
'ஜவான்' படத்தில், விஜய் சேதுபதி ஷாருக்கானுடன் மோதுகிறார். ஷாருக்கான் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழில் வெற்றிப் படங்களுக்கு பெயர்பெற்ற அட்லி இயக்கிவரும் 'ஜவான்' ஒரு 'ஆக்ஷன் த்ரில்லர்' படமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
இவ்வாண்டு ஜூன் 2ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள 'ஜவான்', விஜய் சேதுபதியும் நடிகை நயன்தாராவும் இந்தியில் அறிமுகமாகும் படமாகும்.
இதில் நடிகர்கள் சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், ரிதி டோக்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் தீபிகா படுகோன் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

