பிடித்த இயக்குநர்கள், கதைகளுடன் திரையில் மிளிரும் விஜய் சேதுபதி

பிடித்த இயக்குநர்கள், கதைகளுடன் திரையில் மிளிரும் விஜய் சேதுபதி

2 mins read
69e39588-56b2-4c1b-90c5-dfb27897e95b
‘டிரெயின்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: விகடன்
multi-img1 of 2

‘மகாராஜா’ படத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து படங்கள், கதைகளைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக உள்ளார் விஜய் சேதுபதி. தற்போது தமிழ் நடிகர்களில் அதிகப்படியான படங்களைக் கையில் வைத்திருப்பதும் இவர்தான்.

மைக்கேல், பிரேம், தாஸ், சுமார் மூஞ்சி குமார், முருகேசன் என்று வெவ்வேறு மனிதர்களைப் பிரதிபலிக்கும் வெவ்வேறு விதமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விஜய் சேதுபதியைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பதையும் அவர் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளார்.

அவர் நடித்திருக்கும் ‘காட்டான்’ இணையத்தொடருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள் குறித்துப் பார்ப்போம்.

விஜய் சேதுபதி நடித்த ‘ட்ரெயின்’ படம் இப்போது வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. கோடை விடுமுறையில் ‘ட்ரெயின்’ வெளியாகிவிடும். அது, முற்றிலும் புதிய விதத்தில் ஒரு ரயில் பயணத்தில் நடக்கும் கதையாகப் புதுமையாய் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

‘ஸ்லம்டாக்’ திரைப்படம் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் தயாராகிவிட்டது. ஆந்திரா, மும்பை போன்ற இடங்களில் அதன் படப்பிடிப்பு நடந்தது. அது, அதிரடிச் சண்டைகள், உணர்வுபூர்வமான காட்சிகள் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் பொருள்செலவில் உருவாகி உள்ளதாம்.

‘சீதக்காதி’க்குப் பிறகு இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சத்தமே இல்லாமல் ஒரு படத்திலும் விஜய் சேதுபதி நடித்து முடித்துவிட்டார். ஒரே மூச்சில் படத்தை நடித்துக் கொடுத்துவிட்டாராம். பாலாஜி தரணிதரன் அவரின் அபிமான இயக்குநர்களின் பட்டியலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஜெயிலர் 2’ படத்தில் ஒரே ஒரு நாள் நடித்தாலும், திருப்பம் தரக்கூடிய ஒரு வேடத்தில் சேதுபதி திரையில் தோன்றுவாராம். அவரது பகுதிக்கான படப்பிடிப்பு முடிந்து விட்டது.

‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. சேதுபதிக்கு மிகவும் நெருக்கமான, பிடித்தமான இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார்.

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்திலும் முக்கியப் பங்கு ஏற்றிருக்கிறார் சேதுபதி. வெற்றிமாறனின் வேண்டுகோளுக்கு இணங்கவும் தயாரிப்பாளர் தாணுவின் அன்பிற்காகவும் நடிக்கும் படமாக ‘அரசன்’ அமைகிறது.

அவற்றின் படப்பிடிப்பு முடிந்த பிறகு மணிரத்னம் இயக்கும் படம் ஆரம்பமாகிறது. அதற்கான கதை விவாதங்களில், சற்று ஓய்வாக இருக்கும்போது சேதுபதி கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. அந்தப் படமும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

‘மகாராஜா-2’ கதை, திரைக்கதைப் பணிகளை முடித்துவிட்டாராம் இயக்குநர் நித்திலன். சேதுபதிக்கும் கதை மனநிறைவு அளித்துள்ளது. மணிரத்னம், வெற்றிமாறன் படங்களுக்கு ஈடாக அந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

இதற்கிடையே, இயக்குநர் மகிழ்திருமேனியும் கதை சொல்லி, அதுவும் தயாரிப்புக்குத் தயாராகிவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்