தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொங்கல் போட்டியில் விஜய், சிவகார்த்திகேயன்

2 mins read
b6b6b73e-4ee7-4c0e-a8f8-8d06e7717000
விஜய். - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘ஜனநாயகன்’ பட வேலைகள் முடிந்துவிட்டன. அடுத்த கட்டமாக தொழில்நுட்பப் பணிகளைத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெறுவதில் பலத்த போட்டி நிலவுகிறது. ஆனால் படத்தின் தயாரிப்புத் தரப்பு சொல்லும் விலையைக் கேட்டு விநியோகஸ்தர்கள் மிரண்டுவிட்டதாகத் தகவல். காரணம், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய விலையைச் சொல்கிறார்களாம். விஜய்யும் இந்தத் தொகைக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகக் கூறப்படுவதால் விலை குறைய வாய்ப்பே இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

எனினும், பிரபல தயாரிப்பாளர் லலித்துக்கு சாதகமாகத்தான் விஜய் முடிவெடுப்பார் எனக் கூறப்படுகிறது. இவர் விஜய்யை வைத்து இரண்டு படங்களைத் தயாரித்தவர். மேலும், ‘வாரிசு’ படம் வெளியான போதுதான் அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியீடு கண்டது. அப்போது இரு படங்களுக்கும் திரையரங்குகளை முன்பதிவு செய்வதில் பலத்த போட்டி நிலவியது. அச்சமயம் பிரச்சினை பெரிதாகாதபடி சில ஏற்பாடுகளைச் செய்ததால் லலித் மீது நல்ல மதிப்பு வைத்துள்ளார் விஜய். எனவே, அநேகமாக லலித்துக்குத்தான் ‘ஜனநாயகன்’ திரையரங்க வெளியீட்டு உரிமை கிடைக்கும் எனத் தெரிகிறது.

அதேசமயம், விஜய் சம்மதித்தாலும், லலித் நிறுவனத்துக்கு இந்த விலை கட்டுப்படியாகுமா என்பதுதான் மில்லியன் கேள்வி.

ஒருவேளை அரசியல் ரீதியில் ஏதேனும் சிக்கல் எழுந்தால் அதைச் சமாளிக்கவும் விஜய் தரப்பு தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

எது எப்படியோ, ‘ஜனநாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது, தமிழ் ரசிகர்களைச் சந்திப்பார் என்பது மட்டும் உறுதி என்று உற்சாகத்துடன் கூறுகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

இதற்கிடையே, அடுத்த பொங்கல் போட்டியில் ‘பராசக்தி’ படமும் களமிறங்க உள்ளதாம்.

தள்ளிப் போடப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல் பலவிதமான தடைகள், தாமதங்கள் ஏற்பட்டன. ஆனால், அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதால் பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த அறிவிப்பால் இயக்குநர் வெங்கட்பிரபு சற்றே சோகமாகி இருக்கக்கூடும். முன்னதாக அவரது இயக்கத்தில் அடுத்து நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் சிவகார்த்திகேயன். அதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘பராசக்தி’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. எனவே, சிவா அதில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் வெங்கட்பிரபு படம் அநேகமாக வரும் நவம்பர் மாதம்தான் தொடங்கும் என்கிறார்கள்.

இம்முறை, சிவகார்த்திகேயனுக்கு கதைப்படி இரண்டு நாயகிகள் உள்ளனர். ஒருவர் ‘மாநாடு’ படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன். மற்றொருவர் ‘டிராகன்’ பட நாயகி கயாது லோஹர்.

வெங்கட் பிரபு படத்தை முடித்த கையோடு, ‘குட் நைட்’ இயக்குநர் படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.

அண்மைக்காலமாக இவர் தன்னை வைத்து படம் எடுக்கும் இயக்குநர்களுக்கு பல வகையிலும் தொல்லை கொடுப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. குறிப்பாக, இயக்குநர் சிபிசக்கரவர்த்தி இந்தத் தொல்லைகளைப் பொறுக்க இயலாமல், சிவா வைத்து இயக்கவிருந்த படத்தைக் கைவிட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், சிவகார்த்திகேயன் தரப்போ, அத்தனையும் அப்பட்டமான பொய் என மறுக்கிறது.

குறிப்புச் சொற்கள்