‘சென்னை-28’, ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘கற்றது களவு’, ‘கசடதபற’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘மிடில் கிளாஸ்’ படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
தேவ், கே.வி.துரை தயாரித்துள்ள இதை, கிஷோர் முத்துராமலிங்கம் இயக்குகிறார். முனீஸ்காந்த் கதை நாயகனாக நடித்துள்ளார். அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், படம் விரைவில் திரைகாண உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் விஜயலட்சுமி.
“நான் எப்போதுமே பெரிய இயக்குநரின் மகள், இயக்குநரின் மனைவி என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை. பந்தா செய்வதும் எனக்குப் பழக்கமில்லாத ஒன்று. ஒரு கதாபாத்திரம் பிடித்துப்போனால், கதைக்காக எப்படியும் நடிப்பேன்.
“முனீஸ்காந்துடன் இணைந்து நடித்தது புதிய அனுபவம். அவரைப் போன்ற திறமைசாலிகள், திரைப்படத்துறைக்கு மிகவும் அவசியம்,” என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.
குறிப்பிட்ட ஒரு காட்சியில், வீட்டுக்குள் நடக்கும் ஒரு சண்டையின்போது, இவர் சில பொருள்களை வீசியெறிந்து முனீஸ்காந்தைத் தாக்க வேண்டும். வயதில் மூத்தவரை எப்படித் தாக்குவது எனத் தயங்கியபடியே நடித்துள்ளார். ஆனால் முனீஸ்காந்த் விடுவதாக இல்லை.
“இன்னும் கொஞ்சம் வேகமாக அடியுங்கள்,” என்று தாமே அடியை கேட்டு வாங்கிக் கொண்டாராம்.
“எனக்குத் தெரிந்து வேறு யாரும் இவ்வளவு ஜாலியாக அடிவாங்கியிருக்க மாட்டார்கள். நல்ல நடிகரான அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி,” என்கிறார் விஜயலட்சுமி.
தொடர்புடைய செய்திகள்
“பல பெரிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் விஜயலட்சுமி. அவர்தான் எனக்கு ஜோடியாக நடிக்க வருகிறார் என்பது தெரிந்ததும் எனக்கே ஒருமாதிரியாக இருந்தது. ஆனாலும் கதைக்காக எந்தப் பந்தாவும் இல்லாமல் நடித்துக் கொடுத்தார்,” என்று பதிலுக்குப் பாராட்டுகிறார் முனீஸ்காந்த்.


