நடிகராகத் தமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய விஜய், தற்போது அரசியலில் நுழைந்து தன்னுடைய ரசிகர்களுக்காக இனி செயல்படப்போவதாக முழக்கமிட்டு வருகிறார்.
அரசியலில் முழு கவனத்தையும் செலுத்துவதற்காகத் திரையுலகிலிருந்து சற்று விலகியிருக்க விரும்பினார் விஜய். இதனால், அவருடைய கடைசிப் படமாக ‘ஜனநாயகன்’ கருதப்படுகிறது. அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தணிக்கைச் சான்றிதழைப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால், படத்தின் வெளியீடு தற்போது தள்ளிப்போடப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் வெளியீட்டின்போது சிக்கலைச் சந்திப்பது இது முதல் முறையன்று. இதற்கு முன்பாகவும் அவரது படங்கள் பல்வேறு காரணங்களால் சிக்கலைச் சந்தித்திருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட சில படங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
1. காவலன் (2011)
இயக்குநர் சித்திக் மலையாளத்தில் திலீப், நயன்தாரா ஆகியோரை வைத்து இயக்கிய ‘பாடி கார்ட்’ படம் தமிழில் ‘காவலன்’ என்ற பெயரில் விஜய்யை நாயகனாக வைத்து மீண்டும் உருவாக்கப்பட்டது.
ஆரம்பம் முதலே அப்படம் பிரச்சினைகளைச் சந்தித்தது.
விஜய் நடிப்பில் அப்படத்திற்குமுன் வெளியான ‘சுறா’ திரைப்படம் பெரும் தோல்வியைச் சந்தித்ததால், அந்த இழப்பை விஜய் சரிசெய்ய வேண்டுமெனத் திரையரங்க உரிமையாளர்கள் குரல் கொடுத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
2010ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ‘காவலன்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று படம் வெளியாகுமெனத் தெரிவித்தனர்.
அன்றும் அப்படம் வெளியீடு காணாத நிலையில் இறுதியாக ஜனவரி 14ஆம் தேதி படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது.
ஆனால், ‘காவலன்’ வெளியீட்டிற்கு ஒத்துழைக்கப் போவதில்லை எனத் திரையரங்க உரிமையாளர்கள் பட வெளியீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அறிவித்தனர். சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு ஜனவரி 14ஆம் தேதி பிற்பகல் காட்சியில் இருந்துதான் படம் திரையிடப்படுவது தொடங்கியது.
2. தலைவா (2013)
ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால் உள்ளிட்டோர் நடித்த படம் ‘தலைவா’.
அப்படத்தின் தலைப்பின்கீழ் ‘டைம் டு லீட்’ (Time to Lead) என்ற ஆங்கில வாசகம் இடம் பெற்றிருந்தது. இதுதான் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இப்படியொரு வாசகம் இடம்பெற்றிருந்ததை அப்போதைய ஆளும் கட்சி ஏற்கவில்லை என்று சொல்லப்பட்டது.
அப்படத்தை 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ‘தலைவா’ வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பல திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு, புதுச்சேரியில் அறிவித்த தேதியில் ‘தலைவா’ வெளியாகவில்லை. பிற இடங்களில் படம் வெளியானது.
இதற்கிடையே, அப்படத்தின் திருட்டுக் காணொளி குறுந்தகடுகள் சென்னை, சேலம் போன்ற நகரங்களில் வெளியாகின. தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தலைப்புக்குக் கீழே இருந்த அந்த வாசகம் நீக்கப்பட்டு, அவ்வாண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி படம் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் வெளியானது.
3. கத்தி (2014)
‘துப்பாக்கி’ படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘கத்தி’. இந்தப் படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவுக்குச் சர்ச்சையும் இருந்தது. அக்காலக்கட்டத்தில் இலங்கையை ஆண்ட அரசுக்கு ஆதரவான ‘லைகா நிறுவனம்’ அப்படத்தைத் தயாரித்தது. அதனால் ‘ கத்தி’ படத்தைத் தடைசெய்ய வேண்டும் எனப் பல அமைப்புகள் போராட்டம் நடத்தின.
அதுமட்டுமன்றி, அப்படத்திற்கான கதை திருடப்பட்டதாகப் புகாரும் வந்தது.
4. பீஸ்ட் (2022)
நெல்சன் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’. பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாகக் காட்டப்பட்டுள்ளதாகவும், வன்முறை சம்பவங்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறி கத்தார், குவைத் ஆகிய நாடுகளில் படத்தின் வெளியீடு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்ற கட்சியும் தமிழ்நாட்டில் ‘பீஸ்ட்’ படத்தைத் தடை செய்யக் கோரிக்கை விடுத்திருந்தது.
இவை மட்டுமன்றி, ‘சர்கார்’ ‘தெறி’, ‘துப்பாக்கி’, ‘மெர்சல்’, ‘புலி’ உள்ளிட்ட படங்களும் வெளியீட்டில் சில பிரச்சினைகளைச் சந்தித்தன.

