நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க வந்துள்ளார் நடிகை ரோஜா.
பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் ரோஜா அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்து ‘லெனின் பாண்டியன்’ படத்திலும் ரோஜாவைப் பார்க்க முடியும். ‘அன்பே டயானா’ படத்தில் அம்மாவாக நடித்திருப்பதைக் கேள்விப்பட்ட பல திரையுலக நண்பர்கள், இது துணிச்சலான முடிவு எனப் பாராட்டுகிறார்களாம்.
ஆனால், நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் கேட்ட கேள்வியால் கடந்த பல ஆண்டுகளாக அம்மா கதாபாத்திரங்களைத் தவிர்த்துவிட்டதாக அண்மைய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார் ரோஜா.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த ‘காவலன்’ படத்தில் நடிகை அசினுக்கு அம்மாவாக நடித்திருந்தார் ரோஜா.
“அப்போது படப்பிடிப்புத் தளத்தில் என்னைப் பார்த்த விஜய், ‘நீங்களா அம்மாவாக நடிக்கிறீர்கள்?’ என்று நம்ப முடியாமல் ஆச்சரியத்துடன் கேட்டார். ஒரு முன்னணி கதாநாயகனே இப்படிக் கேட்கிறாரே, நாம் தவறான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்துவிட்டோமோ என்று மனத்தில் பயம் ஏற்பட்டது. அதன் பிறகு சினிமாவில் அம்மா வேடங்களைத் தவிர்த்துவிட்டு சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிட்டேன்.
“இயக்குநர் பாரி இளவழகன், என்னை மனத்தில் வைத்துத்தான் எனக்கான அம்மா கதாபாத்திரத்தை உருவாக்கியதாகச் சொன்னார். அவரது கதையோடு முழுமையாக என்னைப் பொருத்திக்கொள்ள முடிந்தது. ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும். படப்பிடிப்பில் மிகவும் ஆர்வமாக ரசித்து நடித்தேன்,” என்று ரோஜா கூறியுள்ளார்.

