விஜய் நடித்துவரும் ‘ஜன நாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
‘ஜன நாயகன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்துடன் விஜய்யின் காட்சிகளை முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதர நடிகர்களின் காட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த படப்பிடிப்பு, மே மாதத்துடன் முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இப்படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
படம் வெளியாகும் தேதி முன்னரே அறிவிப்பதற்கு மிக முக்கிய காரணம் ‘ஓடிடி’ உரிமை விற்பனை என்று கூறப்படுகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, கெளதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜன நாயகன்’.
கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இது விஜய் நடிப்பில் உருவாகும் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
‘டிராகன்’ படக்குழுவினருடன் விஜய்
இந்நிலையில் விஜய்யை திங்கட்கிழமை (மார்ச் 25) இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்ட ‘டிராகன்’ படக்குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
நடிகர் பிரதீப் ரங்கநாதன், தயாரிப்பாளர்கள் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் ஆகியோரும் விஜய்யைச் சந்தித்தனர்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்த ‘டிராகன்’ ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
இப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தன் வீட்டிற்கே அஸ்வத்தை அழைத்துப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.