‘விக்கல்ஸ்’ விக்ரமை நாயகனாக்கிய ‘பிக் பாஸ்’

‘விக்கல்ஸ்’ விக்ரமை நாயகனாக்கிய ‘பிக் பாஸ்’

2 mins read
b58f21d6-252a-4fa6-9916-30429b3cfde5
‘லைட் வெயிட் பேபி’ படத் தொடக்க விழா. - படம்: விகடன்
Google News Preferred Icon

நகைச்சுவைக் கலைஞராகத் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் ‘விக்கல்ஸ்’ விக்ரம். யூடியூபிலும் இவர் பதிவிடும் காணொளிகள் பலருக்கும் விருப்பம்.

கடந்த பிக் பாஸ் சீசனில் இவர் கலந்துகொண்டு இறுதிச்சுற்றுவரை வந்திருந்தார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வரவேற்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பார்கள்.

அப்படி ‘பிக் பாஸ்’ முடித்துவந்த விக்ரமிற்கு உடனடியாகக் கதாநாயகனாக நடிக்கும் படவாய்ப்பும் வந்திருக்கிறது.

அப்படத்திற்கு ‘லைட் வெயிட் பேபி’ எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். நாயகனாக அறிமுகமாகும் ‘விக்கல்ஸ்’ விக்ரமிற்கு வாழ்த்துகள் குவிந்துள்ளன.

“ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் தாண்டி ரொம்ப பயமாகவும் இருக்கிறது. இந்தப் படத்தில் லீடாக நடிக்கிறேன். அதற்கு நிறைய பொறுப்புகள். அதனால், அதையெல்லாம் யோசித்துக் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது.

“‘பிக் பாஸ்’ போட்டியாளர்களுக்கு, அது ஏற்படுத்தித் தருகிற வாய்ப்புகள் பற்றி நிறைய கருத்து இருக்கும். அது அவர்களைப் பொறுத்தது. வாழ்க்கை எப்போதுமே மாறிக்கொண்டேதான் இருக்கும்.

“‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலமாக எனக்குக் கிடைத்த புகழ் இப்போது எனக்கு உதவி பண்ணியிருக்கிறது என்றுதான் சொல்வேன்.

“அதுவும் இந்த வாய்ப்புக் கிடைத்ததற்கு பிக் பாசும் ஒரு காரணம்தான். இந்தப் படத்துக்கு நான் வசனகர்த்தாவாகவும் இருக்கிறேன். இந்தப் படத்தின் இயக்குநர் பெங்களூரைச் சேர்ந்தவர். அதனால், தமிழ் வசனங்களை நான்தான் எழுதுகிறேன். இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரமாகவும் ‘ஸ்டாண்ட்-அப்’ நகைச்சுவைக் கலைஞராகவும் இருக்கிறேன்.

“என்னுடைய அனுபவங்களையும் இதில் சேர்த்துக்கொள்ள முடிந்தது. ‘ஸ்டாண்ட்-அப்’ நகைச்சுவைக் கலைஞரைப் பற்றிய கதைதான் இந்தப் படம்,” என்று மனம் நெகிழ்கிறார் ‘விக்கல்ஸ்’ விக்ரம்.

பிக்பாசில் பங்கேற்ற ஆரவ், கவின், தர்ஷன், முகேன் ராவ், ராஜூ உள்ளிட்டோர் கதாநாயகர்களாக நடித்ததைத் தொடர்ந்து அப்பட்டியலில் ‘விக்கல்ஸ்’ விக்ரமும் இணைந்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்