நடிகர் விக்ரமும் ‘96’ பட இயக்குநர் பிரேம்குமாரும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இது விக்ரம் நடிக்கும் 64வது படமாக உருவாகிறது.
முன்னதாக, ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்பதே பிரேம்குமாரின் திட்டம். ஆனால், விஜய் சேதுபதியால் அப்போது கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலை. எனவே, காத்திருக்கும் நேரத்தில் வேறொரு கதையைப் படமாக்கிவிடலாம் எனத் திட்டத்தை மாற்றிவிட்டாராம்.
இப்படத்துக்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. அடுத்த மாதமே படப்பிடிப்பைத் தொடங்கி எதிர்வரும் ஜனவரியில் படத்தைத் திரைக்குக் கொண்டுவர விக்ரம் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம்.
‘96’, ‘மெய்யழகன்’ என அடிதடிக் காட்சிகள் இல்லாமல் உணர்வுபூர்வமான கதைகளைக் கையாண்ட பிரேம்குமார், ‘விக்ரம் 64’ல் அதிரடியான கதையைக் கையில் எடுக்க உள்ளதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இவர் சொன்ன கதைச்சுருக்கத்தைக் கேட்ட விக்ரம், “இப்படியோர் கதையை எதிர்பார்க்கவில்லை.’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு இதுதான் சரியானதாக இருக்கும்,” என்றாராம்.
இன்னொரு பக்கம் விக்ரம் நடித்து முடித்து நீண்ட காலமாக முடங்கியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியீட்டுக்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த இரு தகவல்களும் விக்ரமின் தீவிர ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளன.

