ஐபிஎல் போட்டித் தொடர் மீண்டும் தொடங்க இருப்பதால் உற்சாகம் அடைந்துள்ளனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். இதில் நடிகர் விக்ரமும் ஒருவர்.
சிறு வயது முதல் கிரிக்கெட் விளையாட்டில் விக்ரமுக்கு ஆர்வம் அதிகம். பள்ளிப்பருவத்தில் இருந்தே வாய்ப்பும் நேரமும் அமைந்தால் கிரிக்கெட்டுக்குதான் முன்னுரிமை தருவாராம். மகேந்திர சிங் தோனிதான் பிடித்த ஆட்டக்காரர்.
விக்ரமை பற்றி மேலும் சில சுவாரசியத் தகவல்களைப் பார்ப்போம்.
[ο] நாள்தோறும் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்றே ஆக வேண்டும். இல்லையென்றால் அன்றைய நாள் மனநிறைவுடன் முடிவுக்கு வராது என்பார். படப்பிடிப்புகளில் முழு ஆற்றலுடன் செயல்பட கட்டுக்கோப்பான உடலமைப்பு வேண்டும் என்றும் இளம் நடிகர்களுக்கு அறிவுரை கூறுவார் விக்ரம்.
[ο] ரசிகர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர். வெளியூர்ப் படப்பிடிப்பில் பங்கேற்கும் போதெல்லாம் அங்குள்ள தனது ரசிகர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துக் கொள்வார். கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் ரசிகர்களைக் குடும்பத்தோடு வரவழைத்து, படப்பிடிப்புக்கு இடையூறு இல்லாமல் மணிக்கணக்கில் பேசி மகிழ்வார்.
[ο] பள்ளிப் பருவத்தில் நிறைய ஆங்கில நாடகங்களில் பங்கேற்ற அனுபவம் உண்டு. தமிழ்த் திரையுலகுக்கு அதிக எண்ணிக்கையில் கதாநாயகர்களைத் தந்த சென்னை லயோலா கல்லூரியில்தான் விக்ரம் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
[ο] தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், கன்னடம் என ஐந்து மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். ஓய்வு நேரத்தில் ஆங்கிலத்தில் நல்ல கவிதைகளும் எழுதுவார்.
[ο] கோடிக்கணக்கில் பணம் ஈட்டினாலும், பழைய சோறும் கருவாட்டுக் குழம்பும்தான் மிகவும் பிடித்தமானவை. கூடவே, ஆட்டுக்கால் பாயா இருந்தால் சொர்க்கம் என்பார். இவற்றுள் ஏதாவது ஒன்று இருந்தால்தான் அவருக்கு தொண்டைக் குழிக்குள் உணவு இறங்குமாம். மிகவும் குறைவாக, ஆனால், ருசித்துச் சாப்பிடுவதுதான் ‘சீயான்’ வழக்கம்.
தொடர்புடைய செய்திகள்
[ο] விக்ரமின் இதர பெயர்கள் சீயான், கென்னி, ஜான் கென்னடி. இவரது கடப்பிதழில் விக்ரம் கே.வினோத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செல்லப் பெயர் கென்னி.
[ο] நடிகர் ஆகாமலிருந்தால் புகைப்படக் கலைஞராகி இருப்பார். நடிகர் அஜித்தைப் போலவே மனித முகங்களைப் படம்பிடிப்பதில் ‘ஃபோட்டோகிராஃபர்’ விக்ரமிற்கு அவ்வளவு ஆர்வம். அஜித் பாணியில் நெருக்கமான நண்பர்களைப் புகைப்படம் எடுத்து, பெரிய அளவில் ‘பிரிண்ட்’ போட்டுத் தந்து பரவசப்படுத்துவாராம்.
[ο] ஒரு கண்காட்சி நடத்தும் அளவுக்கு விக்ரம் கைவசம் புகைப்படங்கள் இருக்கின்றன. ஓவியம் வரைவதிலும் ஈடுபாடு உண்டு. விக்ரம் வீட்டை அலங்கரிக்கும் ஓவியங்கள் அவரது கைவண்ணம்தான்.
[ο] விக்ரமை நன்கு அறிந்தவர்கள் அவரைக் ‘கார்களின் காதலன்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். தற்போது ‘ஆடி ஆர் 8’ வகையைச் சேர்ந்த காரைப் பயன்படுத்துகிறார்.
[ο] மது, புகை, கேளிக்கை, விருந்து நிகழ்வுகள் என்றால் விக்ரம் ஒத்துழைப்பு கிடைக்காது. படப்பிடிப்பு முடிந்தால் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்.
[ο] திருமதி விக்ரமின் பெயர் ஷைலஜா. காதல் மனைவி. இரு பிள்ளைகள். மகன் துருவ் ‘பைசன் காளமாடனா’க முட்டக் காத்திருக்கிறார். மகள் அக்ஷிதா தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனு ரஞ்சித்தை மணந்திருக்கிறார். பேத்தி ஆர்யா.
[ο] ஆண்டுக்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் விக்ரம். இடைவிடாத படப்பிடிப்பு என்றாலும் இந்தக் குடும்ப விடுமுறையை மட்டும் தம்மால் இழக்கவே முடியாது என்கிறார்.
*** மகன் துருவ்வின் படத்தேர்வுகளில் தலையிடுவதே கிடையாது.