பல தடைகளைத் தாண்டி வெளியாகி உள்ள ‘வீர தீர சூரன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
முதல் நாளில் மட்டும் ரூ.3.25 கோடி வசூல் கண்டுள்ளதாகவும் இரு நாள்களில் மொத்த வசூல் ரூ.10 கோடியைக் கடந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
படத்தின் வசூல் மேலும் அதிகமாகும் என்று படக்குழு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘வீர தீர சூரன்’ படத்தை விளம்பரப்படுத்துவதில் மும்முரம் காட்டிவருகிறார் நடிகர் விக்ரம். இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களுடன் ஒன்றாக அமர்ந்து படம் பார்த்து வருகிறார்.
அந்த வகையில், படத்தின் நாயகியான துஷாரா விஜயனுடன் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டிக்குச் சென்றிருந்தார் விக்ரம். அங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை இருவரும் நேரில் கண்டு ரசித்தனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும் இணையத்தில் அவரது ரசிகர்களால் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல்தான் நடிகை துஷாராவின் சொந்த ஊராகும். அதனால் அவரும் உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசித்தார்.
இதற்கிடையே, வெளிநாடுகளிலும் ‘வீர தீர சூரன்’ படத்தின் வசூல் சிறப்பாக இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து படத் தயாரிப்புத் தரப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிகிறது.
இப்படம் மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விக்ரம் கிராமியத் தோற்றத்தில் ‘காளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மேலும், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக் ஆகியோரும் நடித்துள்ளனர். அருண்குமார் இயக்கி உள்ளார்.