தான் நடிக்கவேண்டிய கதாபாத்திரம் நடிகர் அரவிந்த்சாமிக்கு சென்றதை நினைத்து, சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு கண்ணீர் விட்டு அழுததாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா, நாசர் உள்ளிட்டோரின் நடிப்பில் ‘பாம்பே’ படம் கடந்த 1995ல் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது.
அந்தப் படத்தில் நாயகனாக நடிப்பதற்கு முதலில் தேர்வானவர் நடிகர் விக்ரம்தான். படப்பிடிப்பில் கலந்துகொண்டு சில காட்சிகளிலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், அதே காலகட்டத்தில் விக்ரமனின் ‘புதிய மன்னர்கள்’ படத்தில் நடிப்பதற்காக தாடி வளர்த்திருந்தார் விக்ரம். அந்த தாடி, மீசையை எடுத்துவிட்டு வரும்படி கூறிவிட்டாராம் மணிரத்னம். “அது மட்டும் முடியாது” என்று கூறி படத்தில் இருந்து விலகிவிட்டாராம் விக்ரம்.
இறுதியில் அந்தக் கதாபாத்திரம் அரவிந்த்சாமிக்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் விக்ரம்.
மணிரத்னத்துடன் பணியாற்ற வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதை என்பது போல், அந்தப் படத்தை இழந்தபிறகு குறைந்தது இரண்டு மாதங்கள் வரை ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் அந்தப் படத்தை இழந்ததை நினைத்து அழுவேன்.
அதன்பிறகுதான் மணிரத்தினம் படத்தில் கண்டிப்பாக நடித்துவிட வேண்டும் என்று சபதம் போட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
விக்ரமின் கனவு இறுதியில் நனவாகியது. அவர் மணிரத்னம் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘ராவணன்’ திரைப்படத்தில் ராவணனாக நடித்தார். ‘பொன்னியின் செல்வன்: 1’, ‘பொன்னியின் செல்வன்: 2’ படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

